இஸ்ரேல் தனது அணுவாயுதங்களைத் துறக்க வேண்டும் எனவும் சர்வதேச சமூகம் அதன் அணுசக்தி ஆலைகளை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் ஐ.நா பொதுச் சபையான UNGA செவ்வாய்க் கிழமை வலியுறுத்தியுள்ளது.
அரபு நாடுகளின் மிகப் பெரும்பான்மையான ஆதரவுடன் ஐ.நா பொதுச் சபையில் நேற்று இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் 161 இற்கு 5 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் மத்தியகிழக்கில் சமாதான நோக்கத்துக்கான அணுசக்திப் பயன்பாடு என்ற உடன்படிக்கைக்குக் கட்டுப் படாத ஒரேயொரு நாடாக இஸ்ரேல் இருந்து வருவதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப் பட்டுள்ள தீர்மானம் மூலம் இஸ்ரேல் மேலதிகமாக அணுவாயுதங்களை விருத்தி செய்வது, உற்பத்தி செய்வது அல்லது பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளைக் காலத்தை வீணடிக்காது உடனே நிறுத்த வேண்டும் எனவும் இதுவரை வைத்திருக்கும் அணுவாயுதங்களையும் துறப்பதுடன் IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியின் கண்காணிப்பின் கீழ் தனது அணுசக்தி நிலையங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபையில் கொண்டு வரப் பட்ட இத்தீர்மானத்தை அமெரிக்கா, கனடா, பலாவு, மற்றும் மைக்ரோனேசியா ஆகியவை எதிர்த்திருந்ததுடன் 18 நாடுகள் இதில் பங்கேற்கவில்லை. 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘மத்திய கிழக்கில் அணுவாயுதப் பயன்பாட்டின் அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில் அமெரிக்காவின் முயற்சியால் இஸ்ரேல் மட்டும் தப்பித்திருந்தது. ஆனால் இதற்கு இதுவரை 18 முக்கிய அரபு நாடுகள் கட்டுப் பட்டுள்ளன.
இதேவேளை மத்தியகிழக்கில் அணுவாயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வரும் ஒரேயொரு நாடாக இஸ்ரேல் விளங்குகின்றது. மேலும் இஸ்ரேல் தற்போது 200 தொடக்கம் 400 அணு ஆயுதங்கள் மற்றும் தாங்கிகளை வைத்திருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. ஆயினும் இஸ்ரேல் இதுவரை ஒருதடவை கூடத் தனது அணுவாயுத உற்பத்தி நிலையங்களைப் பரிசோதிக்க அனுமதித்ததில்லை என்பதுடன் சமாதான தேவைக்கு மட்டுமான அணுசக்திப் பயன்பாடு என்ற உடன்படிக்கையில் இணையுமாறு சர்வதேசம் விடுத்து வரும் அழைப்பையும் நிராகரித்து வருகின்றது.
இதேவேளை இஸ்ரேலில் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் பாராளுமன்றம் கலைக்கப் படுவதற்கும் முடிவாகி இருப்பதாக அந்நாட்டுப் பாராளுமன்ற பேச்சாளரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.