இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
“உலகளாவிய இஸ்லாமிய மையம்” (World Muslim league) ஏற்பாட்டில் மக்கா, அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் (The International Conference on Islamic Unity)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இலங்கை சார்பில் நேற்று (13) விஷேட விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அப்துல் அஸீஸ் ஆகியோரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில், உலகளாவிய இஸ்லாமிய மையத்தின் தலைவர் டாக்டர். முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்களின் அழைப்பின் பேரிலேயே ரிஷாட் பதியுதீன் பங்கேற்றிருந்தார்.
கடந்த 12, 13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இம்மாநாட்டில் 1200 முப்திகள், சர்வதேச அறிஞர்கள், அமைச்சர்கள், பன்னாட்டுத் தலைமைகள் மற்றும் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட 127 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
இஸ்லாம் ஒரு சமயமாக இருந்த போதும், சமாதானம் மற்றும் அமைதியை வலியுறுத்தி ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்கும் உன்னத மார்க்கமாகும்.
இஸ்லாம் என்பது சகல மனித இனத்துக்கும் பொதுவான மதமாகும். அது சமாதானத்தின் மதம். அதுமாத்திரமின்றி கூடுதலாக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் பண்பான புனித மார்க்கமாகும். நம்பிக்கையும் ஒற்றுமையும் வலிமையுடன் இருந்தால் இதனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அல்லாஹ் தன்மீது நம்பிக்கை கொண்டுள்ள சகல மக்களுக்கும் ஒற்றுமையாக வாழும்படியும், பிரிவினையை உண்டுபண்ணாமல் இருக்குமாறும் வலியுறுத்திக் கூறியுள்ளான்.
அல்லாஹ் தனது புனிதக் குர்ஆனில் உள்ள “சூரா ஆல இம்ரானில்” 103 வது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான். “அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களில் யாரும் பிரிந்து போகாதீர்கள்” இந்த வாக்கியத்தின் ஊடாக ஒற்றுமையின் முக்கியத்துவம் அல்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள விதத்தைக் கூறுகின்றான்.
இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கமாவும் ஒற்றுமையின் வழியுமாகவும் இருந்த போதும், சர்வதேச சமூக மட்டத்தில், அது சில வேளைகளில் பிழையான கண்ணோட்டத்திலேயே நோக்கப்படுகின்றது. உலக முஸ்லிம்களுள் சில பிரிவினர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளும் செயற்பாடுகளே இதற்கான காரணம் என்பதனையும் நாம் நன்கறிவோம்.
அவர்கள் செயற்கையான பலவிதமான சிக்கல்களை சமூகத்தின் உள்ளேயும், சமூகத்துக்கு வெளியேயும் தோற்றுவித்து இருக்கின்றனர். மிகவும் துக்ககரமான விடயம் என்னவென்றால் இஸ்லாத்தைப் பயன்படுத்தி, பயங்கரமானதும் அச்சுறுத்தக் கூடியதுமான சமூகமட்ட மற்றும் சமய மட்டத்திலான காரியங்களை உண்டுபண்ணும் வகையில், சில விடயங்கள் நடந்தேறி வருவதுதான்.
இலங்கையில் முஸ்லிம்களாகிய நாம் பௌத்த மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டிலே வாழ்கின்றோம். இலங்கை அரசாங்கமானது இன ஐக்கியத்தையும், சமூகங்களுக்கிடையிலான சக வாழ்வையும் ஏற்படுத்துவதற்காக, ஒரு பிரத்தியேகமான அமைச்சு ஒன்றை நிறுவி, பௌத்தர் அல்லாத ஒருவருக்கு அதன் பொறுப்பை வழங்கியுள்ளது. அத்துடன் “ஜம்இய்யதுல் உலமா” எனும் இஸ்லாமிய சன்மார்க்க பேரியக்கம் இலங்கை முஸ்லிம்களை ஒரே குடையின் கீழ் ஐக்கியப்படுத்த அரும்பாடுபட்டு வருவதோடு, ஏனைய இனங்களுடனான சகஜ வாழ்வுக்கான உறவுப் பாலமாகவும் தொழிற்படுகின்றது. முஸ்லிம்களாகிய நாம், எமது அன்றாட வாழ்வில் இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு, சர்வதேச மட்டத்திலான உறவுகளையும் முஸ்லிம் சமூக மட்டத்திலான ஐக்கியத்தையும் கருத்திற்கொண்டு வாழ்வதே சிறந்த நடைமுறையாகும்.
இறுதியாக ஒற்றுமையும் ஒருமைப்பாடுமே இஸ்லாத்தின் அடிப்படை தத்துவார்த்தமாகும். அத்துடன் இஸ்லாமிய ஒற்றுமை எனும்போது அல்லாஹ் ஒருவன், ஒரே கலாம், ஒரே தூதன், ஒரே மதம், ஒரே கிப்லா, ஒரே உம்மத் எனப்படுகின்ற நிலையை நாம் உணர வேண்டும் என்றார்.
-ஊடகப்பிரிவு-