Breaking
Sun. Dec 22nd, 2024
பிரான்ஸ் நாட்டிற்குள் கிறித்துவ மதத்தை சேர்ந்த அகதிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என அந்நாட்டு மேயர்கள் வெளியிட்ட கருத்திற்கு உள்துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 24 ஆயிரம் அகதிகளுக்கு குடியமர்வு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிபரின் இந்த அறிவிப்பை சில மாநகர மேயர்கள் வரவேற்றிருந்தாலும், சில மேயர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ரோன்னே நகர் மேயரான யுவெஸ் நிக்கோலின் வெளியிட்ட கருத்தில், சிரியா நாட்டில் கிறித்துவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலில் சிக்கியுள்ள கிறித்துவர்களை மட்டும் ஏற்றுக்கொள்ள தயார் என கூறியுள்ளார்.
இதே போல், பெல்ஃபோர்ட் நகர் மேயரான டாமியன் மெஸ்லோட் கூறுகையில், இஸ்லாமியர்களை விட கிறித்துவ மதத்தை சார்ந்தவர்கள் தான் இனவேறுபாடு தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டு மேயர்களின் இந்த கருத்து புலம்பெயர்ந்தவர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேயர்களின் கருத்து தொடர்பாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve இன்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, மேயர்கள் கூறியுள்ள இந்த கருத்தில் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. மேலும், இது மிக மோசமான கருத்தாகும்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கிறித்துவர்களை போல் இஸ்லாமியர்களும் இனவேறு தாக்குதலுக்கு உள்ளாகுவதால், இரு பிரிவினரையும் எந்த பாகுபாடும் பார்க்காமல் வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Post