-கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் –
முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலக மகாயுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ள பின்புலத்தில் …
அறபு வசந்தம் காவு கொள்ளப்பட்டதன் பின்னரான உலக ஒழுங்கில் மத்திய கிழக்கில் துரிதப் படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய சியோனிஸ சிலுவை சக்திகளின் கூட்டு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை போகின்ற அறபுலக சுல்தான்களும் சர்வாதிகளும்….
வரலாற்று வைராக்கியங்களை வஞ்சனைகளை தீர்த்துக்கொள்ள நேரடியாகவும் மறை முகமாகவும் வல்லரசுகளின் துணை நாடும் பிராந்திய சக்திகளும் உம்மத்தை அழிவின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றுள்ள நிலையில்….
பிராந்திய இஸ்லாமிய எழுச்சியின் கர்ச்சிக்கும் சிங்கமாக, ஐரோப்பிய முஸ்லிம்களின் அடையாலச் சின்னமாக முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒடுக்கப் பட்ட பலஸ்தீன் மக்களின், ஆக்கிரமிக்கப் பட்டுள்ள லிபிய, சிரிய, இராக் மக்களின் விடுதலைக் குரலாக உலக அரங்கில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும், அர்துகானின் குரல் வளையை நசுக்க எடுக்கப்பட்ட முயற்சியே தோல்வி கண்ட இராணுவ சதிமுயற்சியாகும்.
அல்லாஹ்வின் பேருதவியால் துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி முயற்சி முறியடிக்கப் பட்டது.
அல்லாஹு அக்பர் நாதத்துடன் தமது அரசைப் பாதுகாக்க வீதியிலிறங்கினர் மக்கள், உண்மையான மக்கள் ஆட்சி இதுதான் என உலகிற்கு துருக்கி மக்களும் தலைவனும் பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
எய்தப்பட்ட அம்புகளை மாத்திரமன்றி வில்லை வைத்திருந்த விரல்களையும் ஒடித்துள்ளனர்.
ஐரோப்பாவில் மற்றுமொரு எகிப்தை, லிபியாவை, சிரியாவை, ஈராக்கை காண விரும்பிய சர்வதேச பிராந்திய சதிகாரர்களை தோல்வியடையச் செய்வதில் வேறுபாடுகள் களைந்து மக்கள் தம் தலைவனுடன் அணி திரண்டனர்.
அல் ஹம்துலில்லாஹ்…
அவர்கள், அவர்களது பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள், எமது மண்ணில் நாம் அதே உணர்வுகளோடும், உத்வேகங்களோடும் எமது பணியை செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
உம்மத்தின் அதே எதிரிகள் எமது உள் வீடுவரை ஊடுறுவியுள்ளார்கள், எமது சமூகத்தை மாத்திரமன்றி தேசத்தையும் சர்வதேச சதி வலைகளில் இருந்து காப்பற்றுகின்ற மகத்தான பணி எம்முன்னுள்ளது.
ஓரு உண்மையான மக்கள் தலைவன் அரசியல் ஞானியாக இருக்கின்றான், அடுத்த தலைமுறைகளை பற்றி அவன் யோசிக்கின்றான், அதனால் தான் மக்கள் அவனை நேசிக்கின்றார்கள்.
ஆனால், அரசியல் வாதிகளோ..அடுத்த தேர்தல்களை பற்றியே யோசிகின்றார்கள், மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றார்கள், மக்கள் அவர்களை ஏமாற்றுகின்றார்கள்.