1970 களில் பொருளாதார விடுதலைக்கான முன்னோடியாக இஸ்லாமிய பொருளாதாரமே இருந்தது. எனவே இன்று இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதார முறைமைகள் தொடர்பில் உலகம் அறிய வேண்டிய பல விடயங்கள் உள்ளன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தோனேஷியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இந்தோனேஷியா பல இயற்கை பாதிப்புக்களுக்கும் முகங்கொடுத்துள்ள நிலையில் இன்று நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. எவ்வாறாயினும் இஸ்லாமிய சமூகம் செறிந்து வாழும் நாடுகள் ஆபிரிக்காவிலிருந்து தென்கிழக்காசியா வரை பரந்து காணப்படுகின்றது. அவற்றில் பொருளாதார வளங்கள் செறிவாக காணப்படுகின்றன.
அதனால் பலதசாப்தங்களாக சக்திமிக்க பொருளாதார கட்டமைப்பாக இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன.
பல்வேறு மதங்கள், இனங்கள் வாழும் இலங்கைத் தீவிலிருந்து நான் இஙகு வந்துள்ளேன். இலங்கை பெரும்பான்மையாக சிங்களவர்களும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மக்களின் ஒன்றிணைந்த வாழ்க்கை முறைமையை கொண்டுள்ளது. இன, மத வேறுபாட்டை குறைத்துக் கொண்டு ஒற்றுமையான நிலைப்பாட்டுக்கு நாம் வர பொருளாதார உறவுகளே உறுதுணையாக இருந்தது.
பட்டுப்பாதையிலும் இந்து சமுத்திர வளாகத்திலும் அரேபிய வியாபாரிகள் நிறைந்திருப்பதை நாங்கள் காணலாம். 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் வலுவான வரலாற்று வளர்ச்சியை அடைவதற்கு முன்னரும் ஐரோப்பிய வியாபாரிகள் இவர்களுடன் போராட்டம் நடத்தும் வரையிலும் இந்த நிலை நீடித்திருந்தது.
ஆரம்ப யுகத்தில் இதற்கு நிகரான இன்னொரு சம்பவமும் இடம்பெற்றது. அது சீனாவிலிருந்து இந்தியாவும் ஐரோப்பாவும் கடல்மார்க்கமாக போக்குவரத்தை முன்னெடுத்தபோது பௌத்த மதம் மியன்மாரில் சிறிவிஜய இராசதானியிலிருந்து ஆசியாவின் தென்பகுதி வரையில் வியாபித்திருந்தது.
போக்குவரத்து மார்க்கமாகவும் வியாபார அடிப்படையிலும் வியாபாரிகள் பௌத்த, இஸ்லாமிய தர்மங்களை கொண்டு ஆசியாவில் உள்ள பகுதிகளை ஊடருத்துச் சென்றதால் ஆசிய மக்களிடையே பொறுமை உள்ளிட்ட பண்புகள் மேம்பட்டன.
தற்போது உலகமயமாக்கலை தொடர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முன்னெடுக்கப்படும் பொருளாதார மாற்றங்களை நாமும் பின்பற்றாவிட்டால் எமது இலக்குகளை அடைய நீண்டகாலம் எடுக்கும்.
அதேபோல் பொருளாதார வளர்ச்சியும் இளைஞர்களின் பங்களிப்பும் புத்துருவாக்கமும் வலுவான நிலையில் உள்ளது.
அத்திலாந்திக் சமுத்திரத்திலிருந்து இந்து சமுத்திரம் வரையிலான பகுதியில் வலுவான பொருளாதார சந்தை வாய்ப்புக்களை தன்வசப்படுத்திக் கொள்ள இந்தியாவும் சீனாவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. அது எமக்கு போட்டியாக அமைந்தாலும் மறுபுறம் வாய்ப்பாகவும் அமையும்.
விஞ்ஞான தொழில்நுட்ப அடிப்படையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார முறைமைகளினூடாக எமது நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த முடியும்.
சக்திமிக்க தலைமைத்துவமும் எதிர்கால திட்டமும் இதற்கான உந்து சக்தியாக அமையும். எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒரு வாழ்க்கை சூழல் தேவைப்படுகிறது. அதனை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதனால் எமக்கு மற்றுமோர் வாய்ப்பு உள்ளது.
இன்று ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கினூடாக தென்கிழக்காசியா வரையில் பொருளாதார வலுவாக்கத்திற்கு நெருக்கடியாக இருந்த காரணிகள் முடக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் ஆசியாவின் உற்பத்திகளுக்கு மேற்கத்தைய நாடுகளின் கேள்வி குறைவடைந்துள்ளது. இருப்பினும் நுகர்வோர் இலாபம் ஈட்டும் வரையிலான முதலீடுகள் வலுவடைந்துள்ளன.
உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 1.7 பில்லியன் உலகவாசிகள் வலுவான பொருளாதார மேம்பாட்டை நோக்கி பயணிக்கின்றனர். அதில் தெற்காசியாவில் உள்ளவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
பொருளாதார திட்டங்களினூடாக பெற்றுக் கொள்ளும் பாடங்கள் போன்று சமய அடிப்படையிலான தெரிவுகளும் முக்கியமானது.
குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதார முறைமைகள் தொடர்பில் உலகத்தவர் அறிய வேண்டிய பல முறைமைகள் உள்ளன. 1970 களில் பொருளாதார விடுதலைக்கான முன்னோடியாக இஸ்லாமிய பொருளாதாரமே இருந்தது.
இன்று இலங்கையில் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி ஜனநாயக அடிப்படையிலான ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன்னோடியாக மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்திற்கும் சிறந்த அடித்தளமாக அமையும்.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார மத்தியஸ்தலமாவதே எமது பிரதான இலக்காகும். அதனை அடைவதற்காக அனைத்து கட்டமைப்புக்களையும் உருவாக்கி வருகின்றோம். அதற்கமைய சீரமைக்கப்பட்ட பொருளாதார ரீதியில் மேம்பட்ட சமூகமொன்றையும் கட்டியெழுப்புவோம்.
அதற்காக ஆசிய பிராந்தியத்திலுள்ள நாடுகள் வரலாற்று ரீதியான பொருளாதார ஒப்பந்தங்கள், உலகமயமாதலில் பல்வேறுபட்ட அழுத்தங்கள், வேற்றுமத மேற்கத்தைய நாடுகளின் பொருளாதார முறைமைகளை பின்பற்றல், எமக்கான தனித்துவமான சமய தர்மங்களை பின்பற்றல் ஆகியவைமூலமே எமக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
அதேபோல் எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதார தடைகளை நீக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். என்றார்.