இஸ்லாமிய சொற்பொழிவுகள் மற்றும் பேருரைகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள அரபு மொழி பேசாத இஸ்லாமியர்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள ஜகிர் நாயக் (49), இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
மும்பையை சேர்ந்த இவர் இஸ்லாமுக்கு ஆற்றியுள்ள தொண்டினையும், சேவையையும் சிறப்பிக்கும் வகையில் சவுதியின் புதிய மன்னர் சல்மான் நேற்று பரிசு வழங்கி கவுரவித்தார். மன்னர் ஃபைசல் சர்வதேச பரிசு என்ற பெயரில் இஸ்லாமிய சேவை, இஸ்லாமிய கல்வி, அரபுமொழி மற்றும் இலக்கியம், மருத்துவம், அறிவியல் என 5 பிரிவுகளின்கீழ் இந்த சிறப்புக்குரிய பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
அவ்வகையில், இஸ்லாமிய சேவை என்ற சிறப்பு பிரிவுக்கான பரிசுக்கு இந்தியரான ஜகிர் நாயக் இவ்வாண்டு (2015) தேர்வு செய்யப்பட்டார்.
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னரின் அரண்மனையில் நேற்று நடைபெற்ற விழாவில் இஸ்லாமுக்கு சேவை ஆற்றியது, மற்றும் அமைதி என்ற இயக்கத்தின் பெயரால் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருவது, இஸ்லாம் பற்றி பிறருக்கு கற்பித்து வாழ்நாள் சாதனை புரிந்தது போன்றவற்றுக்காக இந்த சிறப்புக்குரிய பரிசு வழங்கப்படுவதாக இந்த பரிசுடன் வழங்கப்பட்ட கையினால் எழுதப்பட்ட பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரொக்கப்பணம், 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட பதக்கம் ஆகியவை இந்த பட்டயத்துடன் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
இந்த பரிசளிப்பு விழாவில் மன்னர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர், சவுதி அரசின் மந்திரிகள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பரிசை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து பேசிய ஜகிர் நாயக், ’ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அமைதியை வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்’ என்று குறிப்பிட்டார்.