ஈக்குவடோரைத் தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி பலியானவர்கள் தொகை 413 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈக்குவடோரின் பசுபிக் பிராந்திய கடற்கரையை கடந்த சனிக்கிழமை தாக்கிய இந்த பூமியதிர்ச்சியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பலியானவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்குவடோர் எதிர்கொண்ட பாரிய பூமியதிர்ச்சியாக இது விளங்குகிறது. இந்த அனர்த்தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காயமடைந்துள்ளனர்.
பூமியதிர்ச்சி தாக்கி இரு நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை பின்னிரவு கடற்கரை நகரான மான்டாவிற்கு அருகில் இடிந்து விழுந்த ஹோட்டலொன்றின் இடிபாடுகளின் கீழிருந்து 9 மாத மற்றும் 3 வயதுடைய இரு பாலகிகள் உட்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களிலான மீள் நிர்மாணப்பணிகளுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான நிதி தேவைப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ராபயல் கொர்ரியா குறிப்பிட்டுள்ளார்.