ஈராக் தலைநகர் பக்தாத்தில் இருந்து 113 கிலோமீட்டர் தொலைவில் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் தலைநகரும் ஈராக் சுனி முஸ்லிம்களின் முக்கிய நகருமான ‘ராமாடி’ இன்னும் சில மணி நேரங்களுக்குள் ISIS வசம் வீழ்ந்து விட உள்ளதாகவும் குறித்த பகுதியில் ஈராக் இராணுவத்துக்கும் ISIS போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருவதாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேற்குலக ஊடகத்துக்குத் தகவல் அளித்த அன்பார் மாகாண கவுன்சிலின் பிரதித் தலைவர் ஃபலிஹ் எஸ்ஸாவி ஒரு சில பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் தனது அலுவலகத்தில் ஆபத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் ராமாடி நகர் ISIS வசம் வீழாதிருக்க அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலுடன் ஈராக் படைகளின் முற்றுகை உடனடியாகத் தேவை எனவும் ஆனால் பிரதமர் அல் அபாடி தலைமையிலான ஈராக் அரசு எந்தவிதப் பதிலும் இதுவரை அளிக்கவில்லை எனவும் தகவல் அளித்துள்ளார்.
ஈராக்கின் ராமாடி நகரில் நிலமை இப்படியிருக்க அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் சமீபத்தில் வெளியிட்ட வரைபடத்தில் முன்னர் ISIS வசம் இருந்த பகுதிகளில் 25 தொடக்கம் 30% வீதமான இடங்களை அமெரிக்க தலமையிலான கூட்டணி நாடுகளின் உதவியுடன் ஈராக் படை மீளக் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது ஈராக்கில் ISIS தான் கைப்பற்றி இருந்த பகுதிகளில் காற் பங்கை இழந்து விட்டதாக பெண்டகன் தெரிவிக்கின்றது. ராமாடி நிலமை குறித்து பெண்டகனிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது கடந்த ஒரு தசாப்த காலமாகவே ராமாடி யுத்தக் களத்தில் பிராந்திய முக்கியத்துவம் மிக்க இடமாக இருந்து வருவதாகவும் அங்கு ISIS போராளிகளுக்குப் பலத்த ஆதரவு மக்களிடம் இருந்து கிடைத்து வருவதாலும் தான் பின் தங்கிய நிலை என விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.