ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த ஆண்டின் புனித ஹஜ் கடமை ஆரம்பிக்கும் தருணத்திலேயே பிராந்தியத்தின் ஷியா, சுன்னி எதிரி நாடுகளுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஹஜ் கடமையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய யாத்திரிகர்களை சவூதி நிர்வாகமே கொலை செய்ததாக ஆயதுல்லாஹ் அலி கமனெய் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த சனநெரிசலில் 2,426 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமற்ற கணக்குகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த அனர்த்தத்தில் 769 பேரே கொல்லப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிடுகிறது.
கமெனியின் கருத்து குறித்து அல் ஷெய்க், மக்கா பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். அதில்,
“ஷியாக்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாஹியின் புதல்வர்கள். அவர்கள் முஸ்லிம்கள் மீது பாரம்பரியமாக விரோதப்போக்கு கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஷியாக்களை “நிராகரிப்பாளர்” என்பதை இந்த உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.