அண்மையில் ஈரானுடன் P5+1 எனப்படும் உலகின் 6 வல்லரசு நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தமானது 13 வருடங்களில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் வருங்கால அதிபர்களுக்கு நிச்சயம் பிரச்சினை அளிக்கக் கூடியதே என இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா ஊடகப் பேட்டி ஒன்றின் போது ஒத்துக் கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிமை NPR செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியின் போது ஈரானுடன் P5+1 நாடுகள் எட்டிய ஒப்பந்தமானது இனி வரும் காலத்தில் எவ்விதத்திலும் ஈரான் ஓர் அணுவாயுதத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யவில்லை என்பதையும் அதாவது இந்த ஒப்பந்தம் டெஹ்ரான் நிர்வாகம் யுரேனியம் செறிவூட்டலை தொடர்வதற்கு அனுமதிப்பதையும் அதிபர் ஒபாமா மறுக்கவில்லை. ஆனால் ஒபாமா முக்கியமாகக் குறிப்பிட்ட விடயமாக இன்னும் குறைந்தது ஒரு தசாப்த காலத்துக்கு ஈரான் வெறும் 300 Kg நிறையுடைய யுரேனியத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஸ்டாக்பைல் அளவுடைய அணுவாயுதத்தைக் கூடத் தயாரிக்க முடியாது என்பது அமைந்திருந்தது. ஏற்கனவே 2013 தொடக்கம் 2015 ஆம் ஆண்டுப் பகுதியில் ஈரான் ஆனது யுரேனியம் செறிவூட்டலில் மிகத் தேர்ச்சியடைந்து விட்ட போதும் இனிமேல் சுமார் 13 வருடங்களுக்கு அதன் மீது விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டின் காரணமாக இந்த செறிவூட்டல் ஏறக்குறைய பூச்சியத்தை அடைந்து விடும் எனவும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்னமும் 20 மாதங்களுக்குள் பதவிக் காலம் முடிவடையவுள்ள அதிபர் ஒபாமா தனது கண்காணிப்பு இருக்கும் வரை ஒருபோதும் ஈரான் அணுவாயுதத்தைத் தயாரித்து விட முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். இதுவரை தனது யுரேனியம் செறிவூட்டலானது அணுவாயுதத் தயாரிப்புக்காக அல்ல என்று ஈரான் கூறி வந்த நிலையில் அண்மையில் எட்டப் பட்ட ஒப்பந்தம் மூலம் அந்நாட்டின் மீது சர்வதேசம் விதித்திருந்த முக்கிய பொருளாதாரத் தடைகள் சில நீக்கப் படவுள்ளது. இருந்த போதும் இந்த ஒப்பந்தம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.