ஈரானுடன் தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான P5+1 நாடுகள் வியென்னாவில் நடத்தி வரும் அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சு வார்த்தையின் காலக்கெடு நவம்பர் 24 இல் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னர் உறுதியான ஒருமித்த ஓர் தீர்வை எட்ட வேண்டும் என சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் புதன்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக நீடிக்கும் ஈரானின் அணுச் செறிவூட்டலைக் கட்டுப்படுத்தும் இப்பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் அளவு மற்றும் நோக்கம் உட்பட முக்கிய விவகாரங்களில் இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் ஈரான் இயக்கி வரும் அணுச்செறிவூட்டும் ஆலைகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பாகவும் இன்னமும் முக்கிய முடிவுகள் எட்டப் பட வேண்டியுள்ளன. இந்நிலையில் ஹொங் குறிப்பிடுகையில் தீர்வுகளை எட்டுவதற்கு சிக்கலாக இருப்பது அடிப்படையில் அரசியல் சார்புடைய விவகாரங்களே எனவும் இதனால் இதில் ஈடுபடும் அனைத்துத் தரப்பும் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தைத் தவற விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பேச்சுவார்த்தையில் P5+1 தரப்பு ஆக்கபூர்வமான பங்கை வகிக்க சீனா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் எனவும் ஹொங் குறிப்பிட்டார். கடந்த வருடம் நவம்பரில் ஈரானும் P5+1 நாடுகளும் இணைந்து ஈரானினு அணுச் செறிவூட்டலைக் கட்டுப் படுத்துவது தொடர்பில் இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை எட்டியிருந்ததுடன் இதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் தடைகளில் சிலவும் தளர்த்தப் பட்டிருந்தது. எனினும் இந்த 6 மாத காலப் பேச்சுவார்த்தையிலும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப் படாது இடைவெளிகள் உருவானதால் ஜூலை மாதம் இப்பேச்சுவார்த்தைக்கான காலக்கெடுவை நவம்பர் 24 வரை நீட்டிப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.