வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார்.
அவரை சாத்தான் என்று வசைபாடினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்று பட்டம் சூட்டினார். தற்போது ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு உளவு சொன்னதாக கூறி சமீபத்தில் ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டார். அதற்கு ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்திய இ-மெயில் தொகுப்பு திருட்டு போனதே காரணம்.
இதனால் தான் அமெரிக்காவுக்கு விஞ்ஞானி ஷக்ரம் அமீர் உதவி செய்தது ஈரானுக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் என பலர் பேசிக் கொள்கிறார்கள் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ. ஏற்கனவே மறுத்துவிட்டது. அவர் வெளியுறவு துறை மந்திரி பதவி வகித்த போது இ-மெயில் திருட்டு போகவில்லை என கூறியுள்ளது.
மேலும் வடக்கு கரோலினாவில் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஆகிவிட்டால் துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை ரத்து செய்து விடுவார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.