Breaking
Sun. Nov 24th, 2024

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் அணுச்செறிவூட்டலை மட்டுப் படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பாதித்து யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனுடன் இணைந்து உரையாற்றும் போதே அதிபர் ஒபாமா இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் ஈரான் இரகசியமாக அணுவாயுதன் தயாரிக்க முயன்றதால் அதன் மீது மேற்குலகுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள சந்தேகம் இன்னமும் நீங்கவில்லை என்ற போதும் ஈரானுடன் மேற் கொள்ளப் பட்ட இடைக்கால உடன்படிக்கைப் படி பேச்சுவார்த்தை நிறைவுறும் வரை அதன் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் அதிகாரிகளை ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தை குறித்து விவாதித்து இருந்ததுடன் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் எஃப் கெர்ரி பாரிஸ் நகரில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷரிஃபையும் சந்தித்துப் பேசியிருந்தனர். இந்நிலையில் தான் அமெரிக்கக் காங்கிரஸில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதா நிறைவேற்றப் பட்டுத் தனது ஒப்புதலுக்குக் கொண்டு வரப் பட்டால் தான் அதனை நிராகரிப்பேன் என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post