Breaking
Wed. Jan 15th, 2025

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து உடலுறுப்புக்கள் கடத்துவது தொடர்பில் இஸ்ரேலைச் சேர்ந்த முன்னாள் காப்புறுதி உத்தியோகத்தரான அவிகாட் சாண்ட்லர் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. ஒபிரா டொறின் என்ற பெண்ணுக்கு சிறுநீரகங்களைப் பெற முயற்சித்த போது இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சிறுநீரகங்களின் கடத்தலுக்காக இஸ்ரேலில் இருந்து 2 இலட்சம் அமெரிக்க டொலர்களை சாண்ட்லர் இலங்கையில் உள்ளவர்களுக்கு பரிமாற்றம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து பல தகவல்களை இஸ்ரேலியப் பொலிஸார் பெற்றுள்ளனர்.

2012ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஜோன் வைஸ்னர் என்பவர் உடலுறுப்பு ஒன்றைப் பெறுவதற்காக 3 இலட்சத்து 30 ஆயிரம் டொலர்களை வழங்கியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் செய்யப்படும் உறுப்பு தானங்களில் பெரும்பாலானவை திருட்டுத் தானங்களே என்றும் அவை பணத்துக்காகவே செய்யப்படுகின்றன என்றும் ‘நியூயோர்க் ரைம்ஸ்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை போன்று சீனா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், துருக்கி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியனவும் உடலுறுப்புகளைப் பெறும்- கடத்தும் மையங்களாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Post