வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து சகல சமூகங்களின் தேவைகளை பெற்றக்கொடுக்கும் பணியினை முன்னெடுத்துவந்துள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீன் இதனை தொடர்ந்து முன்னெடுக்க முல்லைத்தீவிலிருந்தும் ஆளும் கட்சிக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுத்தர வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நேற்று இரவு முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் –
இன்று இந்த மக்கள் யாரை ஆதரிப்பதன் மூலம் எமது தேவைகளை அடைந்த கொள்ள முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.யுத்தம் அதிகமாக காவு கொண்ட பிரதேசம் முல்லைத்தீவாகும். இந்த மாவட்டத்தினை மிகவும் குறுகிய காலத்தில் நாம் அபிவிருத்தி செய்துள்ளோம்.நவீன பாதைகள்,கட்டிடங்கள்,தொழில் வாய்ப்புக்கள்,மின்சார வசதிகள் என எத்தனையோ அபிவிருத்திகளை எமது இந்த காலப்பகுதிக்குள் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவந்துள்ளோம்.
ஆனால் சிலர் இந்த அபிவிருத்திகைளை இங்கு கொண்டுவருவதற்கு விரும்புவதில்லை.வெறும் உணர்ச்சிகரமான வசனங்களை பேசி மக்களது வாக்குகளை மட்டும் பெற்றதன் பின்னர் மீ்ண்டும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் வருவார்கள்,இப்போது அவர்கள் உங்களது விடுகளுக்குள் நுழைந்து வாக்குகளை பெற ஏதோவற்றையெல்லாம் கூறுவார்கள்.
ஆனால் நாங்கள் அவ்வாறு மக்களை மறந்து செயற்படுவதில்லை.இந்த மக்களது வாக்குகளை கொண்டு அவர்களை திருப்திபடுத்த முடியவில்லை என்றால்,இந்த பதவிகளை நாம் வைத்துக்கொண்டு இருப்பதில் என்ன நன்மை இருக்கின்றது.
இந்த பிரதேச மக்களின் எதிர்காலம் சிறக்க நீங்கள் பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் வருவதற்கு எமக்கு வாக்களிப்பதன் மூலம் நல்லாட்சியின் பங்கை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட ஜ.தே.முன்னணியின் வேட்பாளர் கமலநாதன் விஜின்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.