– பதுர்தீன் சியானா –
அநுராதபுரம், கஹடகஸ்திகிலியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவப் பகுதியில், உணவு விஷமானதால் ஏழு வயதுடைய சிறுமி பலியானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று புதன்கிழமை (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய – ஈத்தல்வெட்டுனுவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.மஹீஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமியின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம், சட்ட வைத்தியப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாட்டிலிருந்து இன்று (21) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் வந்தவுடன் சிறுமியின் சடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில், பலாக்கொட்டையும் தாமரைக் கிழங்கும் சமைத்துச் சாப்பிட்டதையடுத்து அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியின் காரணமாகக் குளிர்பானம் அருந்தியதாகவும் அதனையடுத்து வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதன் பின்னர் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.