Breaking
Mon. Dec 23rd, 2024

கடந்த 11.09.2016 ஞாயிறு இரவு வசந்தம் தொலைக்காட்சி நடத்திய ‘ அதிர்வு ‘  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள்  கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக் கூடாது என்பதற்கான உண்மையான உறுதியான  தர்க்க ரீதியான நடைமுறை யதார்த்தங்களின் அடிப்படையில்  கிழக்கு மக்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் எடுத்துக் கூறிய காரணங்கள்   அனைத்தும் வலுவானதும்  வரவேற்கத்தக்கதுமாகும்.  அவர் எடுத்துக் கூறிய வரலாற்று உண்மைகள்  அவரின் நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்டியுள்ளன. அதற்கு எமது பாராட்டுக்கள்.  இதே தொனியில் வாதிட்ட நல்லாட்சிக்கான சமூக அமைப்பின் அமைப்பாளர் சகோ. அப்துர் ரகுமானையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்குப் பிறகு ஹக்கீமின்  தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய  அக்கட்சியின் அதிஉயர்பீடத்தில்   தவிசாளராக சகோ. அதாவுல்லாஹ் அவர்களும் , செயலாளராக டாக்டர் ஹப்ரத்தும், மசூரா சபையின்  தலைவராக ( எஸ். சுபைர்தீன் ) நானும் , பொருளாளராக இன்றைய கிழக்கின் முதலமைச்சர்  சகோ. ஹாபீஸ் நசீரும் இருந்த பொழுது அன்றைய ஐ. தே. முன்னணி  (U.N.F)  அரசாங்கம் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் புலிகளுடன் பேரம் பேசி ஒரு யுத்த நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது. அதன்  பிரதிபலனாக புலிகள் வட கிழக்கில் ஆயுதங்களுடன் நடமாட முடிந்ததோடு பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் அவர்களைக் கைது செய்யவோ, ஆயுதங்களைக் களையவோ  முடியாத நிலையொன்று எற்பட்டிருந்தது. புலிகள்  தங்கள்  பதுங்குமிடத்திலிருந்து வெளிவந்து விஷேடமாக கிழக்கு  மாகாணத்தில் முஸ்லீம்களைக் கடத்தவும் , பயமுறுத்தி கப்பம் பெறவும் , முஸ்லிம்களைக் கொலை செய்யவும்  தொடங்கினர். . பொலீசில் முறையிட்டும்  பொலிசாரும் இராணுவமும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு நிலையில் இருந்தனர். கிழக்கு முஸ்லிம்களின் அவலநிலை கேட்போர் யாருமின்றி சூனியமாக  நின்றது. முஸ்லிம்களின் உயிர்கள் புலிகளால் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டன. முஸ்லிம்களின் உயிருக்கு மட்டுமல்ல பிணங்களுக்கும் ( ஜனாஸா)  மரியாதையிருக்கவில்லை. வாழைச்சேனையில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட  இரண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவற்றின் பெற்றோர் கோரிய போதும்   பொலிசார் மற்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு  உறுப்பினர்கள் முன்னிலையிலேயே அவை புலிகளால் எரிக்கப்பட்டன. திருகோணமலையில் உறவினர்கள் முன்னிலையிலே முஸ்லிம் ஜனாஸாக்களின் கண்கள்  புலிகளால் பிடுங்கி எடுக்கப்பட்டன. இது உள்ளத்தில் மாறாத வடுவாக உறங்காத உண்மையாக இருக்கின்றது.
இவ்வாறு அநியாயம் நடந்து கொண்டிருந்த ஒரு சூழலில் மு.கா. ன் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ஐ.தே.மு. அரசாங்கத்தில் (U.N.F)    மு.கா. தலைவர் ஹக்கீம் ஐந்து முக்கியமான அமைச்சுக்களை தாங்கிய அமைச்சராக இருந்த போதும் முஸ்லிம்களுக்கு புலிகளால்   நடாத்தப்பட்ட அட்டூழியங்களை தடுக்க முடியாத கையாலாகாத நிலையில் அவர் இருந்தார். அவருடைய செயற்பாடெல்லாம்  , அரசு – புலிகள் ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பதாகவே இருந்தது.
யுத்த நிறுத்தத்தின் பின்பு  அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் டோக்கியோ,  ஒஸ்லோ, பாங்கொக் ஆகிய நகரங்களில்; நடைபெற ஏற்பாடாகி இருந்தன. முஸ்லிம்கள் சார்பில் மு.கா. தனித்தரப்பாக  இதில் இடம் பெற வேண்டுமென மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களும் , அதிஉயர்பீடமும் வலியுறுத்தி நின்றன. இதன் விளைவாக ஹக்கீம் தனியாக பிரபாகரனைச் சந்திக்கச் சென்று தனித்தரப்புக்கு சம்மதம் வாங்கி வந்ததாகக் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தனித்தரப்பாகவன்றி அரசாங்க பிரதிநிதியாகவே கலந்து கொண்டார்.  இந்த இரட்டை வேடத்துக்கு எதிராக மு.கா. தலைவரிடம் சகோ. அதாவுல்லாஹ் பல கேள்விக் கணைகளை தொடுத்து நின்றார் என்பது உண்மையே. உண்மைகள் உறங்குவதில்லை தான்.
ஹக்கீம் – பிரபா ஒப்பந்தத்தின்; மூலம் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனம் அடகு வைக்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுத்தியது. அன்று 2002 ஜூலை மாதம் மு.கா. வின் அதிஉயர் பீடம் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்ற பொழுது அதாவுல்லாஹ் பின்வருமாறு  கதறி கண்ணீர் வடித்தார்.  ஹக்கீமைப் பார்த்த அவர் ‘ இதோ இவர் தான் புலிகளின் தலைவர் ! இங்கே இருக்கிறார் ! இந்த அதிஉயர்பீட கூட்டத்தில் இருக்கின்ற எவரும் எனக்கு முக்கியமில்லை. இரண்டு பேர்களைத் தவிர.  மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மறையும் போது எங்களுக்கு இருவரை மாத்திரம் தான்  காட்டிச் சென்றார். ஒருவர் சுபைர்தீன் ஹாஜியார். மற்றவர் டாக்டர் ஹப்ரத் அவர்கள்.  சுபைர்தீன் ஹாஜீ…..!  டாக்டர் ஹப்ரத்…..! இதோ உங்கள் முன் நான் கண்ணீர் வடிக்கின்றேன். இந்தக் கண்ணீர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் இரத்தக் கண்ணீராகும்.  இந்தக் கண்ணீரால் உங்கள் கால்களைக் கழுவிக் கேட்கிறேன். கிழக்கு மக்களை இந்தப் புலிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் ‘ மேலே மேற்கோளாகக் கூறப்பட்டவை  அனைத்தும் அவரின் வாயில் இருந்து வந்த  உள்ளக் குமுறல்களைக் கக்கும்  வார்த்தைகளாகவே  அமைந்தன. அந்த வார்த்தைகள் எனது உள்ளத்தை உருக்கியது. ஏனெனில் உணர்வுகளும் உண்மைகளும் ஒருபோதும் உறங்குவதில்லை. .
இதனைத் தொடர்ந்து ஹக்கீம் புலிகளுடன் ஒஸ்லோவில் சம்பாஷித்துக் கொண்டிருந்த பொழுது 37 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்  அவசரமாகக் கூடிய மு.கா. அதிஉயர்பீடம் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு எஸ். சுபைர்தீன் அவர்களை மு.கா தலைவராக பிரகடனப்படுத்தியது. எனக்கு எதிராக நீதிமன்றில்  ஹக்கீமால் தடையுத்தரவு பெறும் வரையில் ஏறக்குறைய 2 வாரங்கள் நானே மு.கா. வின் 3 வது  தலைவராக இருக்க நேர்ந்தது.  தடையுத்தரவுக்குப் பிறகும் ஏறக்குறைய மூன்று மாதங்கள் இரட்டை தலைமைத்துவத்தின் கீழ்  செயற்பட நேர்ந்தது. இதற்கு எதிராக நீதிமன்றில் எம்மால் வழக்கு தொடரப்பட்டது.
போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம்.  அதன் பிறகு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து கட்சி மேலும் கூறாகக் கூடாது என்பதற்காகவும் சமுதாய நலன் கருதியும் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
25.02.2003 இல்  ‘அஷ்ரப் காங்கிரஸ்’ என்ற பெயரில் எமது அமைப்பு பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.  அதன் தலைவராக  நானும் ( எஸ். சுபைர்தீன் ) தவிசாளராக ஏ.எல். எம். அதாவுல்லாவும்  , செயலாளராக டாக்டர் ஹப்ரத்தும் , பொருளாளராக ஹாபீஸ் நசீரும் இயங்கினோம். அதிஉயர்பீட அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ் சென்ற நூர்தீன் மசூர் ,  மொஹிதீன் அப்துல் காதர் , எம். பீ. ஏ. அஸீஸ், மசூர் மௌலானா ஆகியோருடன் டாக்டர் உதுமா லெவ்வையும் , முன்னாள் கொழும்பு மேயர் எ. ஜே. எம்.  முஸம்மிலும் இடம் பெற்றனர்.
11.09.2016   அன்று ‘ அதிர்வு’ தொலைக்காட்சி நிகழ்வில் அஷ்ரப் காங்கிரஸின் புரட்சிகர தோற்றம் பற்றி ஞாபகப்படுத்துவதற்கு சகோ. அதாவுல்லாஹ் ஒருவேளை மறந்திருக்கக் கூடும். அஷ்ரப் காங்கிரஸின் தோற்றம் முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. நிகழ்வுகள் வரலாராக மாறினாலும் உண்மைகள் உறங்குவதில்லை என்பதும் உண்மையே.
நான் அஷ்ரப் காங்கிரஸ் தலைவராக இருந்த பொழுது 30.05.2003 ல் சகோ. அதாவுல்லாவின் உந்துதலோடும் , அனுசரணையோடும் என்னால் விடுக்கப்பட்ட பகிரங்க ஊடக அறிக்கையில் கிழக்கு வடக்கிலிருந்து பிரிந்தே இருக்க வேண்டுமென்று கூறியிருந்தேன். அன்று நான் சகோ. அதாவுல்லாவுடன் சேர்ந்து முழங்கிய உரிமைக் குரல் இன்றும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. ஏனெனில் உண்மைகள் உறங்குவதில்லை.
அன்றைய ‘ அதிர்வு’ நிகழ்ச்சியில் கிழக்கின் உள்ளக் குமுறலை எழுப்பிய அதாவுல்லாவுக்கும் சகோ.அப்துர் ரஹ்மானுக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். ஏனெனில் உண்மைகள் உறங்குவதில்லை. மேலும் உண்மைகள் எப்போதும் ஊமையாக இருப்பதுமில்லை.
மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரபின் உணர்வுகளுக்கு உயிரும் உண்மையான உருவமும் கொடுத்து  முஸ்லிம்களின் உரிமைக்காக கர்ச்சித்துக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ. றிஷாட் பதியுதீன் வடக்கிலேயே பிறந்தாலும் தேசிய தலைவனாக நின்று  முஸ்லிம்களின் நிலபுல உரிமை காக்க வடக்கும் கிழக்கும் இன்று பிரிந்திருக்கும் நிலையிலேயே  இரு மகாணங்களாக தொடர்ந்து  இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் அவரது தனியாத  துணிவையும் வீரத்தையும் போற்றாமல் இருக்க முடியாது.

எஸ். சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  

By

Related Post