உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது.
ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம்.
போர் இடம்பெற்ற காலத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் துயரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஓர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அவசியமாகின்றது.
தற்போதைய அரசாங்கம் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒன்றை அமைக்கும் யோசனையை மட்டுமே முன்வைத்துள்ளது.
ஒரு இன சமூகத்தினால் மற்றுமொரு இன சமூகம் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை தடுக்க இவ்வாறான ஆணைக்குழு அவசியமாகின்றது.
மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.
இந்த காரியாலயத்திற்கான நிதி வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படக் கூடாது. அரசாங்கமே இதற்கு நிதி வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.