இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக வழக்குத் தொடர்வதென்றால் அதிக அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராகவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வழக்குத் தொடர்வது நியாயமாகாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக எவரையும் வேட்டையாடக் கூடாது. இலங்கையின் அரசியலமைப்பையும் மக்களின் இறையான்மையும் பாதிக்காத வகையில் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும். இதற்காக ஐ.நா. வில் எமக்கு ஆதரவளித்த அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொழும்பு ஹைட்பார்க் (பிலிப் குணவர்த்தன மைதானம்) மீள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸாம்மிலின் அழைப்பின் பேரில் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தம் தொடர்பில் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்குத்தாக்கல் செய்வதால் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையோ, இணக்கப்பாட்டையோ மக்களிடம் ஏற்படுத்த முடியாது. இந்த யுத்தத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியவர்கள் பிரபாகரனும் விடுதலைப்புலிகள் அமைப்பினருமே ஆவர்.
எனவே அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். ஒரு தரப்பினருக்கு வழக்குத் தொடர்வதால் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை.இலங்கையின் அரசியலமைப்பையோ அல்லது மக்களின் இறையான்மையோ பாதிக்கும் விதத்தில் எந்த விதமான செயற்பாடும் முன்னெடுக்கப்படமாட்டாது. சர்வதேச விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதால் கிடைக்கப் பெற்ற வெற்றியாகும்.
எனவே நாட்டிற்கு எதிரான பொருளாதார தடை விதிக்கப்படும், சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எவரும் அஞ்சத் தேவையில்லை. ஆனால் உண்மையை கண்டறிய வேண்டும். அதற்காக எவரையும் வேட்டையாட வேண்டிய அவசியமில்லை. உண்மையைக் கண்டறிவதன் மூலமே தேசிய மீள் இணக்கத்தையும், இனங்களிடையே சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும்.
உண்மையைக் கண்டறிவதற்காக விசேட ஆணைக்குழு அமைக்கப்படும். அதன் கீழ் அனைத்து மதங்களையும் சார்ந்த மதகுருமார் அடங்கிய கருணைக்குழுவும் அமைக்கப்படும். இதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பாக முறைப்பாடுகள் பெறப்படும்.
இம் முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டக்குழு இலங்கையின் சட்டங்களுக்கு அடிப்படையில் தீர்மானம் எடுக்கும்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நீதிபதிகள் சட்டத்தரணிகள் உதவிப்பெறப்படுமானால் அது தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகள் பெறப்பட மாட்டாது. பாராளுமன்றத்திற்கு இவ்விடயம் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகள் உட்பட பல கட்சிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின் வழிகாட்டலுடன் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இவ் அரசாங்கத்தில் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நியமிக்கப்ட்டுள்ளார். எதிர்கட்சியின் பிரதம கொறடாவாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர திஸாநாயக்க நியமிக்கபட்டுள்ளார். இது இல்ங்கையில் ஏற்பட்ட ஒரு அரசியல் யுகப் புரட்சியாகும். இதற்கு முன் இவ்வாறான ஒரு அரசியல் யுகப் புரட்சி ஏற்பட்ட கிடையாது.
கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைகள் எடுக்கப்படும், எமது படையினருகேதிராக சட்டநடவடிக்கை வரும், சர்வதேச நீதிமன்ற விசாரணை வரும் என மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்களிடையே அச்சம் குடிகொண்டது.
ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு இந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது. அத்துடன் சர்வதேச விசாரணை என்ற அச்சம் தகர்க்கப்பட்டது என்றார்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் எம்.பி.க்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.