அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை இலங்கை முஸ்லிம்களுக்கு செய்யும் சேவைகளைப் பாராட்டிய உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லா பின் முஹ்சின் அல்துர்க்கி உலமா சபையின் சேவைகளுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் அல்துர்க்கி கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்தார்.
அவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் ஆகியோர் வரவேற்றனர். உலமா சபையின் அனைத்துப் பிரிவுகளையும் செயலாளர் நாயகம் அல்துர்க்கி பார்வையிட்டார்.
உலமாசபையின் செயற்பாடுகள், சமூகத்துக்கு ஆற்றும் பணிகள், இன நல்லிணக்கத்துக்கான விழிப்புணர்வுகள் என்பன உலமா சபையின் தலைவரினால் விளக்கப்பட்டன. உலமாசபையின் ஆரம்பம் எவ்வாறு இருந்தது என்பது பற்றியும் விளக்கப்பட்டது.
ஜம்இய்யாவின் ஊடகம், மக்தப் என்பவற்றுக்கு தனது வாழ்த்துக்களை முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி தனது வரவேற்புரையில்,
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் சமாதானமாக நல்லுறவுடனே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அண்மைக்காலமாகவே முஸ்லிம்களுக்கு எதிராக சில பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அரசு முன்னின்று செயற்பட்டுவருகிறது. முஸ்லிம்களுக்கு உலமா சபை வழிகாட்டல்களை வழங்கியும் வருகின்றது என்றார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்டுவரும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சேவைகள் பற்றி அறிந்து தான் மிகவும் மகிழ்வதாக உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
உலமாசபை தலைமையக விஜயத்தில் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகத்துடன் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் ஹுசைன் முஹம்மத்தும் கலந்துகொண்டிருந்தார்.