வற்வரி திருத்தங்களின் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படாது. அரசின் “உயரிய சில்லறை விலையை” மீறி அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோரை கண்டுபிடிக்க நாடு முழுவதும் விழிப்புக்குழுக்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன என்று அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் குழு தெரிவித்தது.
கொழும்பில் நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் செயலாளரும் அரசாங்கத்தின் வாழ்க்கை செலவு தொடர்பாக ஆராயும் குழுவின் தலைவருமான ரி.வி.கே.பி.தென்னகோன் மேலும் தெரிவிக்கையில்,
16அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி நீக்கப்பட்டது. அது தொடர்ந்தும் அமுலில் இருக்கும். வற்வரி திருத்தப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அரசு தீர்மானித்த உயரிய சில்லறை விலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. எனவே, நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
தற்போது சுப்பர் மார்க்கட்களில் அரசு அறிவித்த உயரிய சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். சந்தையில் ஏற்பட்டுள்ள இப்போட்டித் தன்மை ஆரோக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்தால் அது தொடர்பில் 1290 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிடலாம்.
இது வரையில் அதிக விலைக்கு பொருட்களை விற்ற 85 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்கு எமக்கு ஆளணி போதாமல் உள்ளது.
இது தொடர்பில் அண்மையில் பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சுட்டிக்காட்டினோம். தேவையான ஆளணியை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார். எதிர்காலத்தில் ஆளணி அதிகரிக்கப்படும் அதேவேளை விழிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றார்.
இங்கு ஹெக்டர் —கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன முக்கியஸ்தர் துமிந்த பிரியதர்ஷன குறிப்பிடுகையில் அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்கலாம். இது வழமையான விலை அதிகரிப்பாகும். அரிசி விலைகளில் தற்போது குறைப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டரிசியின் விலை ரூபா 10, 15 ஆக குறைந்துள்ளது.
நாட்டுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது. எனவே அரிசியின் விலை அதிகரிக்காது என்றார்.