கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும்.
தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால் இந்தக் கால இடைவெளியை 8 மாதங்களாக குறைக்க முடியும். மேலும், பல்கலைக்கழக அனுமதி காத்திரிப்பு காலம் அதிகரித்திருப்பதனால், மாணவர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி செல்லும் வீதம் அதிகரித்து வருகின்றது.
எனவே, மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கச் செய்வதே இதன் நோக்கமாகும். இது குறித்து கல்வி அமைச்சுயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மொஹான் லால் மேலும் தெரிவித்தார்.