– ரொபட் அன்டனி –
ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரி்ல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது.
குறிப்பாக 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான வாய்மூல மதிப்பீட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளதால் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடராக அமைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.