பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின் ஒத்துழைப்புடன் உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து மலேசியா சென்ற இரண்டு புலி செயற்பாட்டாளர்கள் இந்த பாதாள உலகக்குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி, புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் தலைமையிலான குழுவினர் மற்றும் நெடியவன் தரப்பினர் ஆகியோரும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.