Breaking
Sun. Dec 22nd, 2024

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா! நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப எல்லா மகன்களின் பாசத்தையும் ஒரே மகனாக தனது தாயிடம் பொழிந்துக் கொண்டுள்ளார், சீனாவைச் சேர்ந்த ஒரு அன்பு மகன்.

பெண் குழந்தைகளின் மனதில், தந்தை எப்போதுமே ஹீரோதான். இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே பெண் குழந்தைகள் தான் செய்யும் காரியங்களால் தந்தைக்கு அவ்வப்போது அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பர். ஆனால், ஆண் பிள்ளைகள் தங்களின் தாயின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த நமது சமூகங்களில் வாய்ப்பு கிடைப்பது மிகமிக அரிது. இந்த வாய்ப்பு கிடைக்கும் ஒரு சில மகன்கள் மட்டுமே பாக்கியசாலிகள்.

தென்-மேற்கு சீனாவில் உள்ள சாங்க்காங் நகரத்துக்கு அருகே உள்ள டோங்க்சின் கிராமத்தில் வாழ்ந்து வரும் சென் க்சிங்யின்(48) என்பவர் விவசாயக் குடும்பத்தில் ஆறாவது பிள்ளையாக பிறந்தார். தனது ஏழு வயதில் மின்சாரம் தாக்கியதில், பாதிக்கப்பட்டு இரு கைகளையும் முழுமையாக இழந்தவர், தனது அன்றாடப் பணிகளை தானே கவனித்து கொள்கிறார்.

அதுமட்டுமின்றி குடும்பத் தொழிலான விவசாயம், ஆடு மேய்த்தல் என தினந்தோறும் பல்வேறு வேலைகளையும், பொறுப்புடன் கவனிக்கும் சென் க்சிங்யின், ஒரு நல்ல மகனாக நடந்துகொண்டதாலேயே சீனப் பத்திரிகைகளின் முழு கவனத்தையும் தற்போது தனது பக்கமாக ஈர்த்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர், மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தனது தாயை, அவரே முழுமையாக கவனித்து வருகிறார். இரு கைகளும் இல்லாத நிலையிலும், மூன்று வேளையும் சமைத்து, தனது வாயால் பற்றியிருக்கும் ஸ்பூனால் உணவை எடுத்து தாயாருக்கு பாசத்துடன் ஊட்டியும் விடுகிறார்.

கை, கால் நன்றாக இருக்கும் பலரும் தமது தாய், தந்தையரை கவனிக்க நேரமின்றி, பணம் சம்பாதிக்கவும் நாள் முழுவதும் அவசர வேலைகள், தம் மனைவி, குழந்தைகள் என மட்டுமே அலைந்துகொண்டிருப்பர்.

எந்தப் பிரயோஜனமுமின்றி வீட்டிலிருக்கும் பெற்றோரை, குப்பையாய் வீட்டை விட்டு அனுப்பும் பிள்ளைகளுக்கு இடையே தனது 88 வயது தாயை கவனித்துக் கொள்ளும் அந்தக் கிராமத்தின் ஹீரோவாக சென் க்சிங்யின் மாறியுள்ளார். அனைத்து தாயாரும், இதுபோல பிள்ளை தங்களுக்கு இருக்க வேண்டும் என ஆசைப்படும் வகையில் தன்னுடைய தாயாரை அவர் கவனித்து வருகிறார்.

இதுபற்றி கேட்டபோது, ‘கை இல்லையென்றால் என்ன? என் தாயை கவனித்துக்கொள்ள கால் இருக்கிறது. அது போதும்!’ என்கிறார் சென் க்சிங்யின்.

ஒரு மனிதனுக்கு நிறைய பிள்ளைகள் இருக்கலாம்., ஆனால் ஒரே தாய்தான் இருக்க முடியும். ஊரே நம்மை முதியவனாய் பார்க்கும்போதும், எப்போதும் குழந்தையாகவே எண்ணும் தாயை நேசிப்போம். அவர்கள் நம்மை கோபப்படுத்துவதாலோ, தொல்லை கொடுப்பதாலோ தாயில்லை என ஆகிவிடுமா என்ன?

கைகள் இல்லாதவரே இவ்வளவு அழகாக தனது தாயை கவனித்துக் கொள்ளும்போது, நேரமில்லாமையால் தாயை கவனிக்க முடியவில்லை என்று இனியும் காரணம் கூறாதீர்!

Related Post