Breaking
Sun. Dec 22nd, 2024

– அபூஹஸ்மி –

கண்ணியமிக்க ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இப்புனிதமிகு நோன்பு காலத்தை பயபக்தியோடும் இறை அச்சத்தோடும் எதிர்கொண்டு பூரண பலன் அடைய முயற்சிக்க வேண்டும். கடந்து சென்ற ரமளானில் நமது சமூகம் பெரியதொரு நெருக்கடியை சந்தித்தது. அதுதான் கிரிஸ் பூதம் என்றும் கொள்ளையர்கள் என்ற பெயரிலும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடப்பட்டது. நாட்டின் நாலா புறங்களிலும் காணப்பட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள பெண்கள் ஆண்கள் இரவு நேரங்களில் தராவிஹ் தொழுகைக்கு செல்ல முடியாத அச்சமிக்க சூழல் காணப்பட்டது.

இன்று அத்தகைய அவல நிலை நீங்கிவிட்டது. மாற்றங்களுக்குச் சொந்தக்காரன் வல்ல இறைவனே. அல்லாஹ்வின் அருளால் தீய குணம்கொண்ட மோசடிக்கார ஆட்சி அதிகாரம் சரிந்து புதிய ஆட்சி உருவாகியுள்ளது. புதிய ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வரும் வேளையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மற்றுமொரு சோதனைதான் இந்த மறிச்சுக்கட்டி பிரச்சினையாகும்.

புலிப் பாசிசத்தின் கொடுமையினால் அகதிகளாக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் கடந்த இருபது வருடங்களாக புத்தளத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். யுத்தம் நிறைவுபெற்று தமிழ் மக்களைப்போல முஸ்லிம்களும் தத்தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வாழ ஆரம்பித்தனர். குறிப்பாக மன்னார் முசலிப்பிரதேச மறிச்சுக்கட்டி கிராம முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறி வாழ்வதை விரும்பாத சில இனவாதிகள் இந்த மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கின்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறே வடக்கு மக்களின் விடிவுக்காக அயராது உழைக்கின்ற இந்த மக்களின் ஏக பிரதிநிதியான அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்களையும் காழ்ப்புணர்வுகொண்டு நோக்குகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக செய்துவருகின்ற சேவைகளையும் உதவிகளையும் தாங்கிக்கொள்ள முடியாத இந்த விஷமிகள் அவருக்கெதிரான பல்வேறு நச்சுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

மாவனெல்லையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினையாக இருந்தாலும், தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையாக இருப்பினும், அளுத்கம இன வன்முறையாக  இருப்பினும், கொழும்பு முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அங்கு சென்று களத்தில் நின்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற எமது சமூகத்தின் தலைவன், வீரன் அல்ஹாஜ் ரிஷாட் பதிவுதீன் அவர்களுக்கெதிராக இன்று சிங்கள இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிஷாட் அமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் விசாரண செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் , அகதிகளாக்கப்பட்ட அப்பாவி வடக்கு முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றியது குற்றமா? அல்லது நாட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்ற போது துணிந்து களத்தில் நின்று போராடுவது குற்றமா? அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் உரிமைக்குரல் எழுப்புவது குற்றமா? சொல்லுங்கள் எது குற்றம். அல்லது இனவாதிகள் ஒரு சமூகத்தின் அரசியல் தலைவரை ஓரங்கட்டும் நோக்கோடு அப்பட்டமான பொய்களையும் வதந்திகளையும் இட்டுக்கட்டுவது நியாயமா?

எனவே, ஒட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களதும் உரிமைக்காக குரல்கொடுக்கின்ற, எப்போதும் எமது சமூகத்தின் விடிவுக்காக சிந்திக்கின்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன்  போன்ற சமூகத் தலைவர்களை மக்களாகிய நாம் பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.

கயவர்களின் கொடிய அரக்கத்தனமான கெடுதல்களில் இருந்தும் சதி முயற்சிகளில் இருந்தும் அமைச்சர்  றிஷாத் பதியுதீன்  அவர்களை பாதுகாக்க நாம் அனைவரும் இந்த புனித நோன்பு மாதத்தில் எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போம். எமது மக்களுக்கும் அதன் சமூக பாதுகாவலர்களுக்கும் யாரெல்லாம் தீங்கு விளைவிக்க நினைக்கின்றார்களோ அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும் என ஒவ்வொரு தொழுகையின் பின்னும் இறைவனிடம் மன்றாடுவோம்.

அவ்வாறே, யா அல்லாஹ், சங்கைமிக்க இந்த புனித ரமலான் மாதத்தை எம் அனைவருக்கும் அருள் நிறைந்ததாகவும் மக்பிரத் மிக்கதாகவும் ஆக்கி அருள்புரிவாயாக.

Related Post