ஊழல் புகார்களினால் சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த சம்மேளனத்தில் முக்கிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உயர் அதிகாரியான டொமினிகோ ஸ்காலா ஸ்விட்சர்லாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பணம் கொடுத்து வாக்குகளை பெற்றதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால், கத்தர் மற்றும் ரஷ்யாவிற்கு அளித்த உரிமைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவும், 2022 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கு கத்தரும் உரிமை பெற்றுள்ளன. ரஷ்யா உரிமை பெற்றதில் எவ்வித முறைகேடும் இல்லை என ரஷ்யா அதிகாரி அலெக்ஸி சொரேகின் தெரிவித்துள்ளார். அவ்வாறே கத்தரும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் 2022 போட்டிகளுக்கு தாங்கள் தயார் செய்து வருவதில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளது.