சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். களின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, வான்வழி தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். அதற்கு பதிலளித்த ரஷியா, தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை சிரியாவில் விமான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
ரஷியாவின் இந்த பிடிவாதத்துக்கு அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிபரின் படைகளுக்கு ரஷியா உதவியாக இருப்பதுபோல் கிளர்ச்சியாளர்களுக்கு தீவிர ஆதரவு அளித்து அதிபரை ஆட்சியைவிட்டு விரட்டியடிக்கும் வகையில் சிரியாவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி அதிரடி தாக்குதல் நடத்த இந்நாடுகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் இந்த திட்டத்துக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதிபரின் படைகளுக்கு ஆதரவு அளித்து வருவதுடன் சிரியாவில் அமைதி நிலவவும் மத்தியஸ்தம் செய்துவரும் ரஷியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் புதிய திட்டத்தால் தனது முயற்சியில் பின்னடைவு ஏற்படும் என கருதுகின்றது.
இதற்கிடையே, ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக நேற்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர். வரும் 25-ம் தேதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைக்க இந்த கூட்டம் நடைபெற்றது.
அலெப்போ நகரில் அரசுப் படைகளுடன் சேர்ந்து ரஷியா நடத்திவரும் வான்வழி தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என கிளர்ச்சியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
கடந்த பத்து நாட்களில் மட்டுமே ரஷியாவின் வான்வழி தாக்குதல்களில் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ள கிளர்ச்சியாளர்கள் உடனடியாக போர்நிறுத்தம் செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என அவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
ரஷியாவின் சமரச திட்டத்தின்படி போனால் சிரியாவில் போர்நிறுத்தம் ஏற்பட இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கருதுகின்றன. இந்நிலையில், ரஷியாவுக்கு சரியான பதிலடி தரும்வகையில் அதிரடியாக தங்கள் நாட்டு விமானப்படைகளின் பலத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், ரஷியாவின் விமானப்படைகளை வீழ்த்தும் வகையிலும் அமெரிக்கா மற்றும் அதற்கு ஆதரவான வளைகுடா நாடுகள் ரகசிய திட்டம் தீட்டி வருகின்றன.
இத்தகைய திட்டம் ரஷியா மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் நேற்று ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் உலகநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிறப்பான முறையில் நாங்கள் உருவாக்கியுள்ள சமரச ஏற்பாட்டை அமெரிக்காவின் நடவடிக்கை சீர்குலைத்து விடும் என அவர் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் ரகசிய திட்டத்துக்கு ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் அமெரிக்காவுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜெர்மனி நாட்டு நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், ‘அமெரிக்கர்களும் நமது அராபிய கூட்டாளிகளும் ஒரு விஷயத்தைப் பற்றி மிக தீவிரமாக அலோசிக்க வேண்டும். நிரந்தமாக போர் நடந்து, மீண்டும் உலகில் போர் உருவாக வேண்டுமா? என்று அவர்கள் யோசிக்க வேண்டும்’ என எச்சரித்துள்ளார்.