Breaking
Tue. Dec 24th, 2024

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் , சிறப்பதிதியாக  வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின்  மீள் குடியேற்றம் மற்றும்  கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் 110 இற்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதோடு இலங்கையை சேர்ந்த  சுமார் 100 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் மாநாடு முடிவடைந்த பின்னர் மேலும் இரண்டு நாட்கள் வெளிக்கள சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக், அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளின் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவோரே  இந்த மாநாட்டில் பிரதானமாக  பங்கேற்கின்றனர்.

இந்த மாநாடு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று மாலை (20)  சந்தித்த சர்வதேச அபிவிருத்தி பணிப்பாளர் மார்க் நோயல் , இணைப்பு அதிகாரி அன்ட்ரியா தியோடரா ஆகியோர் சந்தித்து பேசிய பின்னர்   இலங்கையில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ் .முகம்மட் ரியாஸ், தேசிய கூட்டுறவுச்சபையின் தலைவர் லலித் பீரிஸ்,ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாலு ஐயர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச்செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்,மற்றும் டாக்டர் அஸீஸ்  உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சர்வதேச இளைஞர் கூட்டுறவுச்சம்மேளனம் உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் இந்த சர்வதேச மாநாடு கடந்த வருடம் ஆர்ஜன்டினாவில் நடத்தப்பட்ட போதே,  இந்த வருடம் இலங்கையில் அதனை நடத்துவது எனத்தீர்மானிக்கப்பட்டதாக இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ் .முகம்மட் ரியாஸ்  தெரிவித்தார். ஆர்ஜண்டினா மாநாட்டில் தானும் கூட்டுறவு ஆணையாளர் நசீர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” இலங்கையில் நடத்தப்படுகின்ற இந்த சர்வதேச மாநாடு  இலங்கையின் கூட்டுறவுத்துறையை மேலும் வலுப்படுத்த உதவும் எனவும் கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த துறையானது  தாம் பொறுப்பேற்றதன் பின்னர், படிப்படியாக  விருத்தியடைந்து வருகின்றது. இதற்கென   பல்வேறு நவீன வழிமுறைகளும் புதிய அணுகுமுறைகளும்   தற்போது புகுத்தப்பட்டு வருகின்றன.” இவ்வாறு  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது, கூட்டுறவுத்துறைசார்ந்த சர்வதேச செயற்பாட்டாளர்களிடம் எடுத்துரைத்தார்.

இலங்கையில் இடம்பெறும் இந்த மாநாடு, இலங்கையின் கூட்டுறவுத்துறையை மெருகூட்டுவதற்கும் உலகளாவிய தொடர்புகளை பரிமாறுவதற்கும்  உதவுமென  நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ரிஷாட், இந்த சர்வதேச சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு இலங்கை உதவுமெனவும் குறிப்பிட்டதோடு,சர்வதேச சம்மேளன முக்கியஸ்தர்களுக்கும் சம்மேளனத்துடன் வலுவான தொடர்புகளை பேணி இலங்கையின் கூட்டுறவுத்துறையின்  வளர்ச்சிக்கு காத்திரமான பங்காளிகளிப்பை நல்கி வரும்  செயற்பாட்டாளர் ரியாஸுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள    பயிற்சி அமர்வானது ,  கூட்டுறவுத்துறையை  சீரமைக்கவும், நிலைபேறான  தன்மையை பேணவும் பெரிதும்  வாய்ப்பளிக்குமென அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Post