Breaking
Sat. Nov 16th, 2024

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) “உலக பட்டினி ஒழிப்பு” தொடக்க முயற்சிகளுக்கு தனது அமைச்சின் கீழான, அதனுடன் தொடர்புபட்ட அத்தனை நிறுவனங்களும் பூரண பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்தார்.

உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி பிரெண்டா பார்டன் (Ms.Brenda Barton), அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நேற்று (18) சந்தித்தபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான அரச பங்குதார அதிகாரி முஸ்தபா நிஹ்மத்தும் பங்கேற்றிருந்தார்.

போஷாக்கின்மையை இல்லாமலாக்குதல், இலங்கையர்களின் வாழ்க்கை முறையில் புகுத்தப்பட்டிருக்கும் குறைந்த ஊட்டச்சத்துள்ள உடன் உணவுகளுக்கு (Fast-food)  பதிலாக, ஊட்டச்சத்துள்ள உணவுப் பாவனையை ஊக்குவித்தல் என்பவற்றை முன்னெடுக்கும் உலக உணவுத் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு, அமைச்சரின் வலுவான உதவிகளையும் வதிவிடப் பிரதிநிதி பிரெண்டா பார்டன் கோரினார்.

உலக விவசாய அமைப்பு (Food Agriculture Organization) கடந்த 16 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக உணவு தினத்தில் (World Food Day) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை தொட்டுக்காட்டிய  வதிவிடப் பிரதிநிதி, “உணவின் காரணமாக ஏற்படும் தேகாரோக்கிய பாதிப்புகள், இலங்கையின் சனத்தொகையில் 32% சதவீதமானோரே ஆட்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதையும், நிரந்த வதிவிடப் பிரதிநிதி, இந்த சந்திப்பில் ஞாபகப்படுத்தினார்.

அத்துடன், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக வங்கியின் கருத்துப்படி, விவசாய உற்பத்திகள் மூலம் இலங்கையானது, உணவுப் பாதுகாப்பில் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் ஆனால், போஷாக்கின்மையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

இந்தப் பின்னணியில் இலங்கையானது, இரண்டு வழிகளை முன்னெடுக்கக் உலக உணவுத் திட்டம் உதவும். அந்தவகையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் அரிசியின் மூலம் உணவுப் போஷாக்கை பலப்படுத்துவதற்கும் அதனை வலுப்படுத்துவதற்கும் உதவியளிப்பதோடு, அவசரமாக பயன்படுத்தும் (Emergency Food) உணவுப் பொருட்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உதவியளிக்கும். முதலாவது தெரிவிலே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சானது, உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து பெரும்பங்களிப்பை நல்க முடியும். அடுத்த தெரிவிலே, அமைச்சுக்கு கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, நெடா மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊட்டச்சத்துமிக்க, தரமான உணவுகளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10 வருடங்களாக இலங்கையில் ஊட்டச்சத்தின்மைக் குறைபாட்டு வீதம் மாற்றமடைந்து வருவதற்கு தீவிர கரிசனையே காரணமாக இருக்கின்றது. அத்துடன் 45% பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் பருமனடைகின்றனர். இவர்களுக்கும் விழிப்புணர்வுகளை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இவை குறித்து, உணவுத் துறையுடன் தொடர்புடைய இலங்கை கம்பனிகளுடன் நாம் பேச்சு நடாத்தியுள்ளோம். இந்த விடயங்களில் அமைச்சும் தலையீடு செய்து, அவர்களின் உணவுத் தயாரிப்புக்களின் மூலம் நிறையுணவை வழங்குவதிலும், அதனை ஊக்கப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றும் வதிவிடப் பிரதிநிதி பிரெண்டா பார்டன் தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியின் இந்த ஒருங்கிணைந்த செயற்பாட்டை வரவேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கருத்து தெரிவித்த போது,

“இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையாளர்களின் பங்களிப்பு 52% சதவீத நேரடி பங்களிப்பையும் மேற்பார்வையையும் நல்குகின்றது. சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், உணவு மற்றும் குடிபானத் துறைகள் பங்குவகிக்கின்றன.

மேலும், உணவுப் பாதுகாப்பு சங்கிலித் தொடரை பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அமைச்சு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச தரச்சான்றிதழ் மற்றும் இதர உணவுப் பாதுகாப்புத் தொடர்பான சான்றிதழ்கள் மூலம் உணவின் தரத்தை பேணுவதற்கு அது மேலும் உதவியளிக்கின்றது.

அத்துடன், எமது அமைச்சின் மூலம், உணவுத் தரத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்பட்டு, உணவைப் பேணல், உணவின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பிலான ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து, நெருக்கமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-  

Related Post