நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் இருவர் சாரம் அறுந்து 69-வது மாடியில் தொங்கினர். மீட்பு பணி தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நிலையில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001- ஆம் ஆண்டில் செப்டம்பர் 11-ந் தேதி அல்-காய்தா பயங்கரவாத தாக்குதலால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2,996 கொல்லப்பட்டனர்.
2006-ஆம் ஆண்டில் அந்த பகுதியில் கட்டப்பட்டு வந்த மற்றொரு கோபுரத்தை உலக வர்த்தக மையமாக மாற்றி அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. புதிதாக கட்டப்பட்டு முதல் உலக வர்த்தக மையம் என்று அழைக்கப்படும் இந்த கட்டடம் கடந்த வாரம் 3-ஆம் தேதி வர்த்தகத்துக்காக திறக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல் உலக வர்த்தக மையத்தை சுத்தம் செய்யும் பணிகள் வழக்கமான முறையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த பணியை தனியார் நிறுவத்தின் ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது கட்டடத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்து வந்த ஜூவான் லோபஸ், ஜூவான் லிசாமா ஆகிய இரண்டு ஊழியர்கள் நின்று கொண்டு வேலை பார்த்த இரும்பு சாரத்தின் தொங்கு கம்பி திடீரென அறுந்தது, இதனால் சாரம் ஒருபுறமாக சாய ஆரம்பித்தது.
இந்த விபத்தைக் கண்ட மற்ற ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அனுப்பினர். 104 மாடிகள் கொண்ட வர்த்தக மைய கட்டடத்தில் 69-வது தளத்தின் வெளிப்புறத்தில் ஊழியர்கள் இருவரும் தொங்கியபடி உயிருக்கு போராடினர்.
இதன் பின்னர் மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில், 69-வது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை மீட்பு படையினர் உடைத்து தொங்கிக் கொண்டிருந்த இருவரையும் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வர்த்தக மையத்தினுள் பத்திரமாக இழுத்தனர்.
ஊழியர்கள் இருவருக்கும் எவ்வித காயங்களும் இன்றி சரியான அணுகுமுறையால் தக்க சமயத்தில் மீட்கப்பட்டனர். இதனை அடுத்து மீட்பு பணியை கீழே இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் கைத் தட்டி மீட்புப் பணியினருக்கும் உயிர் தப்பிய ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
சாரத்தின் கம்பி அறுந்ததற்கான காரணத்தை அறிய தனியார் நிறுவனத்துக்கு மன்ஹாட்டன் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.