கிழக்கு மக்களை அடிமைகளாக்கி அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சூழ் நிலையில் கிழக்கில் எளிமையான மேதின நிகழ்வை நாம் நடத்தியிருப்பது வரலற்றில் முதன் முறையாகும் என உலமா கட்சி தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.
பொத்துவில் பிரதான வீதியில் உழைப்பாளர் ஐக்கிய முன்னணி தலைவர் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற உலமா கட்சியின் மேதின விழாவில் அவர் மேலும் தெரிவித்ததாவது
கிழக்கில் முஸ்லிம்கள் மூன்று லட்சத்துக்கு மேல் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில் படித்தவர்கள் இல்லையா? அரசியல் தெரிந்தோர் இல்லையா? இங்குள்ள உழைப்பாளர்களுக்கு பிரச்சினைகள் இலையா? நமது பிரச்சினைகளை நாமே பேச வேண்டுமென்பதற்காகவும் கிழக்கு மக்களை கவுரவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த மேதினத்தை நாம் பொத்துவிலில் கொண்டாடுகிறோம். இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சியால் நடாத்தப்பட்ட முதலாவது மே தினக்கூட்டம் பொத்துவிலில் நடை பெற்றது வரலாற்றில் நிச்சயம் பதிவு பெறும்.
இன்று கிழக்கு மக்களை வடக்குடன் இணைப்பதற்குரிய தந்திரங்கள் நடக்கின்றன். ஏற்கனவே நாம் இரவோடிரவாக இணைக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டோம். எக்காரணம் கொண்டும் கிழக்கை வடக்குடன் இணைக்க விட மாட்டோம் என முஸ்லிம் காங்கிரசோ அதன் ஏஜன்டுகளோ இதுவரை பகிரங்கமாக சொல்லவில்லை. காரணம் அவர்கள் டயஸ்போராவின் பணத்துக்கு மண்டியிட்டு விட்டனர்.
நாளை கிழக்கு இணைக்கப்பட்டால் ஹக்கீமுக்கோ அவர் உறவினருக்கோ எந்த பாதிப்பும் இல்லை. நாம்தான் அடிமைகளாக வாழ வேண்டும். இவர்கள் சொல்கிறார்கள் என்னுடைய வீட்டையும் அவர்களின் வீட்டையும் இணைத்து விட்டு எனக்கு ஒரு அறை தரப்போகிறார்களாம். இத்தகைய போலி வார்த்தைக்கு நாம் மயங்க மாட்டோம்.
பொத்துவிலில் நாம் ஆரம்பித்திருக்கும் இந்தப்பயணம் தொடர வேண்டும். நல்லாட்சியை பிரட்டுவது எமது நோக்கமல்ல.அது முடியுமானதுமல்ல. எமது நோக்கம் நல்லாட்சியின் கீழ் எமது உரிமைகளை பெறுவதற்காக குரல் எழுப்புவதுதான். எம்மிடம் பணபலம் இல்லை. ஆள் பலம் இல்லை. அதிகார பலம் இல்லை. ஆனால் இறைவன் தந்த ஒரேயொரு பலம் உண்டு. அதுதான் அறிவுப்பலம். அந்த பலத்தை பயன்படுத்தியே இஸ்லாம் சொல்லும் எளிமையில் இக்கூட்டத்தை நடத்திக்காட்டுகிறோம்.
நல்லாட்சி ஏற்பட்டு ஒன்றரை வருடங்களாகி விட்டன. கிழக்கு மாகாண விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்தனவா? ஒலுவிலில் காணியை இழந்த மக்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு கிடைத்ததா? ஆலிம் நகர் காணிகள் மீள க்கிடைத்ததா? மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நமது காணிகள் மீளக்கிடைத்ததா? நாம் மஹிந்த ஆட்சியில் 150 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவைத்தோம். இப்போது ஆறு வருடங்களாகியும் அந்நியமனம் தொடரவில்லை. இவ்வாறான பல விடயங்கள் நல்லாட்சி அரசு தர வேண்டும் என்று நாம் போராடுகிறோம்.
உங்கள் வாக்குகளை ஏமாற்றி பெற்றவர் கொழும்பில் உல்லாசமாக தூங்குகிறார். அவருக்கு தெரியும் கிழக்கான் ஏமாந்த மட்டையன் என. நாங்கள் மட்டையன் அல்ல என்பதை நிரூபிப்பதாயின் ஜனநாயகம் தந்த வழியில் நின்று இவர்களுக்கெதிராக பேச வேண்டும். தொடர்ச்சியான சத்திய கிரஹங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கிழக்கு மக்கள் விழித்து விட்டார்கள் என இந்த ஏமாற்று துரோக தலைமையின் உறக்கம் கலையும். என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.