பழுலுல்லாஹ் பர்ஹான் / அகமட் எஸ். முகைடீன்
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அமைச்சில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக சிராஸ் மீராசாஹிப் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
நாட்டு மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு சேவைகளை வழங்கி வருகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளை அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அமைச்சர் அதாஉல்லா சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.
எக்காலத்திலும் இல்லாதவாறு பெருந் தொகையான வாகனங்களும் திண்மக் கழிவகற்றும் இயந்திரங்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதோடு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டது.
இதன் மூலம் பொது மக்களுக்கான நலன்கள் சிறப்பான முறையில் பேணப்பட அமைச்சர் வழிவகுத்தார். மேலும் மக்களுக்கான சேவைகள் சிறப்பாக அமையும் வகையிலும் குறித்த சபைகளின் செயற்பாட்டை விரைவு படுத்தும் வகையிலும் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.