தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ். மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்து தன்னால், முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சிக்குள் வெளியில் இருந்த தனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை விளக்கி உரையாற்றும் போதே மாயதுன்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி என்னை தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.
எனினும் ஊழல் இல்லாத நாட்டை காண்பது எனது அபிலாஷை . ஊழலுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்பார்த்தது போல, கடந்த தேர்தலில் அந்த கொள்கைக்கு மக்கள் அங்கீகாரத்தை வழங்கவில்லை.
இதனால், தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்ட என்னை போன்ற படித்த புத்திசாலிகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இதனால், மக்களின் நிலைப்பாட்டுக்கு தலைவணங்கி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.
அரச சேவையை அரசியல் மயப்படுத்தலில் இருந்து விடுவிக்கவும் அரச சேவையை பாதுகாக்கவும் பல அர்ப்பணிப்புக்களை செய்த மக்கள் விடுதலை முன்னணிக்கு அரச ஊழியர்களின் வாக்குகளான தபால் மூல வாக்களிப்பிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. 7.5 வீத தபால் மூல வாக்குகளையே மக்கள் விடுதலை முன்னணி பெற்றது.
இதனால், மக்கள் ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஊழல்வாதிகளுக்கே அங்கீகாரம் வழங்கியிருப்பதால், மிகவும் ஜனநாயக ரீதியில் மக்களின் நிலைப்பாட்டுக்கு தலைவணங்கி நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனவும் மாயாதுன்ன கூறியுள்ளார்.