Breaking
Fri. Nov 15th, 2024

முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம்

வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.

ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் , எந்த முதலாளிகளும் கண்டு கொள்வதேயில்லை.

உலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர். எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.

இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.

இங்கிலாந்தில்
‘உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்’ என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்து ‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

ஃபிரான்ஸில்
1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .

அமெரிக்காவில்
1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.

1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில்
1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.

ரஷ்யாவில்
1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.

சிக்காக்கோவில்
1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.

1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.

8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.

பாரீசில்
1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

அன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை. மிக கைசேதத்திற்குறிய விஷயம் என்னவெனில், இது நாள் வரை பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் அடிப்படைப் பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை. அவர்கள் செல்லொணாத் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சிறுவர்கள் உழைப்பாளிகளாக, கொத்தடிமைகளாக நகத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புத்தகங்களை சுமக்கிற வயதில் சுமைகளைத் தூக்குகின்ற அவல நிலை உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.

இவர்களெல்லாம் போராடுவதற்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது. ஆக இஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும். இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை களைய முடியும்.

இஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறது.

பூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.

அவற்றில் சில: ……

இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான் 16:14

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்துக் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான், 17:66

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, 2:198

பின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10

மேற்கூறப்பட்ட வசனங்கள் உழைப்பை வலியுறுத்தும் வசனங்கள்

மேலும் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் செலவழிக்கவும், ஜக்காத் ஸதக்கா வழங்கவும் செல்வத்தை சேமித்து வைத்துக்கொண்டு செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வோருக்கு கடும் தண்டனை உண்டு எனவும் கூறக்கூடியவைகள் உழைப்பை வலியுறுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.

எல்லா இறைத்தூதர்களும் உழைத்திருக்கின்றார்கள்

தாவூத் நபியைக்குறித்து அல்லாஹ் கூறும்போது ‘…..நாம்; அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கித் தந்தோம் ‘வலுப்பமுள்ள போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்'(என்றும் சொன்னோம்) 34:10,11.

இவ்வாறு குறிப்பிடுகிறான்.

அவர் போர்க்கவசங்கள் செய்யக்கூடியவராக இருந்தார் என்பதையே மேற்கூறப்பட்ட வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

முஹம்மது நபி(ஸல்)அவர்களும் உழைத்திருக்கிறார்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்.

உழைப்பதை வலியுறுத்தும் நபிமொழிகள்:
‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி: 3406, 5453.

”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071.

”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2072, 2073.

உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது

“(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.

உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி,அவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளும் பணியாளரிடம் நபி(ஸல்)அவர்கள் நடந்து கொண்ட விதமும் நடக்கச்சொன்ன விதமும்

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5460.

‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன்.

அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான்.

எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்.

அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.

”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2270.

ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.
திர்மிதீ: 1949.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப் பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.

உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள்.

பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா) ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5225.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லைஎன அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி: 6038.

……உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 30 .

அதே நேரத்தில் உழைப்பாளிகளும் தங்களின் உழைப்பில் அக்கறை செலுத்துவதோடு முதலாளிகளை ஏமாற்றாமல் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

உழைத்து செலவழிப்பவரின் சிறப்புகள்
ஒரு மனிதன் (உழைத்துச்)செலவழிக்கிற தீனார்களில் சிறந்தது தன் குடும்பத்தாருக்கு செலவழிப்பதாகும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் (தனக்கு போர் புரிய உதவும் ) வாகனத்திற்கும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் தன் தோழருக்கும் செலவழப்பதுமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்: 2357.

‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
புகாரி: 1425.

”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 1427.

நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
புகாரி: 1428

”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 1442.

நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 7430.

ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.
நூல் தப்ரானி: 15619.

அர்ஷின் நிழல்
தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு (வகையினருக்கு) பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்……. அவர்களில் ஒருவன் தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்…… என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 1423.

மேற்கூறப்பட்ட அனைத்து பொன்மொழிகளும் உழைப்பாளிகளுக்காகவே சொல்லப்பட்டவை

இப்படி உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர்களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால், அது மிகையல்ல.

எனவே, உழைப்பாளிகளை கண்ணியப் படுத்துவோம். அவர்களின் உரிமைகளை வழங்கிடுவோம் அல்லாஹ்வின் அருளைப்பெற்றிடுவோம் உழைப்பாளிகளும் தங்களின் கடமைகளையும் பண்புகளையும் உணர்ந்து தங்களின் முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் தங்களின் இறைவனுக்கு பயந்து செயல்படவேண்டும். அல்லாஹ் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக.

ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி,
பேராசிரியர்: JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம் IRGT பள்ளிவாசல்,
நாகர்கோவில்.

By

Related Post