Breaking
Tue. Jan 7th, 2025

தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அரசியல்வாதிகள் சிலர் என்னைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றனர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா புதிய சாளம்பைக்குளம், அல்/அக்ஸா மக்தபின் முதலாம் வருடப் பூர்த்தி நிகழ்வு, அதன் அதிபர் கே. ரபிவூத்தீன் தலைமையில் நேற்று மாலை (12/ 11/2017) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

அரசியல்வாதி என்பவர் மக்கள் பணியாற்றுவதை மையமாக வைத்தே செயற்பட வேண்டும். அந்த வகையில் எனக்குக் கிடைத்த அமைச்சுப் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றுவதுடன், அதற்கப்பாலும் சென்று இன, மத பேதமின்றிப் பணியாற்றுகின்றோம். சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவுமே ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இன்று வியாபித்து வருகின்றது.

எம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களும், ஏசியவர்களும், திட்டித் தீர்த்தவர்களும், சாபமிட்டவர்களும் இன்று எமது பக்கம் படிப்படியாக வந்துகொண்டிருக்கும் அதேவேளை, இன்னும் சிலர் அரசியல் காழ்ப்புணர்வினாலும், வங்குரோத்து தனத்தினாலும், எம்மைப் பற்றிய இல்லாத பொல்லாத கதைகளை நாக்கூசாமல் சொல்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போதுதான், மெனிக் பாமில் தஞ்சமடைந்திருந்த ஐந்து இலட்சம் அகதிகளை பரிபாலித்து, பின்னர் அவர்களில் 75% களை சொந்த மண்ணில், அரசின் உதவியுடன் குடியேற்றினேன். இந்தக் குடியேற்றம் முடிந்து, 1990 இல் வெளியேற்றப்பட்டு அகதி முகாமில் வாழ்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம் அகதிகளை குடியேற்ற முயற்சித்து நடவடிக்கை எடுத்த போதுதான் எனது அமைச்சு கைமாற்றப்பட்டது.

குறித்த அமைச்சுப் பதவியை வகித்தவர்களுக்கு அதே அமைச்சுப் பதவியை வழங்குவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பதனால், மீள்குடியேற்ற அமைச்சை எனக்குத் தர முடியாதெனக் கூறிவிட்டனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுத் தலைவராக வருவதற்கு, அந்த அரசிலிருந்து வெளியேறி, பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு நாம் ஆதரவளிக்க உடன்பட்ட போது, மீள்குடியேற்ற அமைச்சை மீண்டும் தர வேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய நல்லாட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

என்னோடு வந்த அகதிச் சமூகம் நிர்க்கதியாக நின்றதினாலேயே இந்தக் கோரிக்கையை உறுதிபட வேண்டி, ஒப்புதலையும் பெற்றுக்கொண்டோம். எனினும், புதிய அரசாங்கம் உருவாகிய போது, அந்த அமைச்சை எனக்குத் தர முடியாதென கை விரித்துவிட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசுக்கு தாம் ஆதரவுக் கரம் நீட்டுவதானால், ரிஷாட்டுக்கு வடக்கிலே பணிபுரியக் கூடிய எந்தவொரு அமைச்சையும் கொடுக்கக் கூடாதென்ற அழுத்தத்தை வழங்குவதாகவும் அரச தரப்பு தெரிவித்தது. “முதலில், ரிஷாட்டுக்கு எந்தப் பதவியையும் கொடுக்க வேண்டாம்” எனத் தமிழ்க் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். அவ்வாறு செய்ய முடியாதென நாங்கள் கூறினோம். அப்படியானால் வடக்கில் பணிபுரியக் கூடிய எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்க வேண்டாமென நிர்ப்பந்தித்தனர் என்று அரச தரப்பு கூறியது.

இந்த நிலையிலேயேதான் வேறொரு அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, அயராது முயற்சிகளில் ஈடுபட்டேன். இதற்காக அமைச்சரவையில் ஐந்து அமைச்சரவைப் பத்திரங்களை இற்றை வரை சம்ர்ப்பித்ததன் விளைவினாலேயே மீள்குடியேற்றத்துக்கான பல வழிகள் தற்போது பிறந்துள்ளன. நீண்டகால அகதிகளை சொந்தத் தாயகத்தில் குடியேற்றுவதற்காக மீள்குடியேற்ற செயலணியை அரசாங்கம் அமைத்தது.இந்த செயலணி வெறுமனே வானத்தால் வந்து குதித்தது அல்ல என்பதை அறிவுபூர்வமானவர்கள் ஏற்றுக்கொள்வர்.

அது மாத்திரமின்றி நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது அண்மைய வரவு-செலவு திட்டத்தில், கடந்த கால சரித்திரத்தில் என்றும் இல்லாத வகையில் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக ஒருதொகைப் பணத்தை ஒதுக்கியுள்ளார் என்றால், இவை எல்லாம் மந்திரத்தால் மாங்காய் பறிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அரசுக்கு வழங்கிய அழுத்தங்கள், நிதியமைச்சர் உடனான பல சந்திப்புக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகளின் பிரதிபலன்களே இவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்மைப் பொறுத்தவரையில் அடுத்தவனின் அபிவிருத்திக்கு நாங்கள் ஒருபோதும் உரிமை கோரியதும் இல்லை. அதேபோன்று நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தியை எவரும் தடுப்பதற்கு, நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம் என்பதையும் மிகவும் திட்டவட்டமாகக் கூற விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக்க, ஜனூபர், வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என்.பீ.ஜுனைத் மற்றும் எஸ்.ஐ.எம். இமாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுஐப் எம்.காசிம் 

Related Post