Breaking
Fri. Nov 15th, 2024

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதன் பின்னர், தற்போது செயற்பாட்டிலுள்ள இலங்கை பத்திரிகைச் சபை மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகிய இரண்டும் செயலிழக்கச் செய்யப்படும் என, நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, நேற்றுப் புதன்கிழமை (07) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், ‘இலங்கை பத்திரிகைச் சபையானது, சிறந்தவொரு நிறுவனமாக இருக்கின்ற போதிலும், அது தொடர்பில், ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியே காணப்படுகின்றது. இதற்கு மாற்றீடாகவுள்ள இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு வசம், போதிய அதிகாரங்கள் இல்லை’ என்றார்.

இவ்வாறாக, அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் இரு நிறுவனங்களிலும் காணப்படும் பலவீனங்கள் காணப்படுவதாகக் கூறிய பிரதியமைச்சர், இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தவதற்கான நிறுவனமொன்று, இலங்கையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

‘இக்காரணங்கள் காரணமாக, சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றின் தேவை அத்தியாவசியமாகவுள்ளது. இந்நிலையில், ஊடகங்களுக்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் சீரமைப்புகள், ஊடக நிறுவனங்களின் விருப்பத்துக்கிணங்கவே முன்வைக்கப்படும். தவிர, சட்டம் என்ற ரீதியில், குறித்த ஒழுங்குபடுத்தல்கள், பலவந்தமாகத் திணிக்கப்படப்போவதில்லை’ என்று கூறிய அவர், இந்த நடைமுறையினால், ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதில்லை, மாறாக, செய்திகளுக்கு வரையறையொன்றே வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது தவறு எனவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் ஊடகவியலாளர்கள் அதிகம் தாக்கப்பட்டும் கடத்தப்பட்டும் இருந்தனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

By

Related Post