ஊடகவியலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கான சம்பள திட்டங்கள், ஒழுக்க கோவைகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு வழிநடத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்தார்.
நமது நாட்டு புகைப்பட கலைஞர்களுக்கான ஒழுக்க கோவையினை தயாரித்து அதனை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று(02) சனிக்கிழமை கொழும்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் ஊடகங்களின் தரங்களை மேம்படுத்தும் நோக்கில் கொள்கை தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஊடகவியலாளர்களதும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் கவனமெடுக்கப்படுமென தெரிவித்தார். இத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து ஊடகவியலாளர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாட தாம் அனைவரும் எதிர்பார்த்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் எந்தவொரு ஊடகவியலாளரும் தமக்கான ஒழுக்க கோவைகளிலிருந்து விலகி அதனை மீறி நடக்கும் போது அதனைத் தடுக்கும் விதத்தில் எதிராக செயற்பட ஒரு ஒழுங்கமைப்பு நிர்மாணத்தின் அவசியம் பற்றியும் அவர் இங்கு தெளிவுபடுத்தினார்.
அனைத்து ஊடகவியலாளர்களையும் தொழில்சார்ந்த நேர்த்தியான ஊடகவியலாளர்களாக மாற்றுவதற்கு எங்கு சாத்தியமுள்ளதோ நாம் அங்கிருந்து ஆரம்பிக்கலாம் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.