விவாகம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர சில பெண்ணிய அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.முஸ்லீம் தனியார் சட்டம் என்பது இறைவனாலும் இறை தூதராலும் வகுக்கப்பட்ட சட்டங்களுக்கமைய தொகுக்கப்பட்ட முஸ்லீம்களுக்கான வாழ்க்கை முறையாகும்.நவீன நாகரீகமானவர்கள் என்றும் அதி உயர் கல்வித்தகைமை பெற்றவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கும் ஒருசில பெண்ணிய வாதிகள் மேற்கூறிய “ஷரியா” என்னும் இஸ்லாமிய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நினைப்பது, இறைவனுக்கும்,இறைத்தூதருக்கும் தெரியாதவற்றை தாங்கள் அறிந்துள்ளதாக கூறுவதற்கு ஒப்பாகும்.
“மார்கத்தில் செய்யப்படும் அனைத்து நூதனங்களும் வழிகேடேயாகும்.சகல வழிகேடுகளும் நரகப் படுகுழியில் கொண்டுபோய் சேர்க்கும்” என்பது நபிமொழியாகும்.அல்லாஹ்வும்,ரசூலும் சொல்லாத எதனையும் உலகின் எவர் சொன்னாலும் அதனை முஸ்லீம் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதை ஆணித்தரமாகவும்,அறுதியகவும், இறுதியாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில் குர்ஆனையும்,ரசூலின் ஹதீஸையும் முஸ்லீம்கள் தமது உயிருக்கும் மேலாக மதிக்கின்றனர்.
இறைச் சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் முஸ்லீம்களின் மார்க்க வழிமுறையைப் பாதிக்கும் என்பதால், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது தலையாய கடமையாகும். முஸ்லீம்களின் மார்க்க விடயங்களில் வழிகாட்டியாக இயங்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மீது இதுபற்றி மகத்தான மாபெரும் பொறுப்பு இருக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே .இதில் இருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள முடியாது.
எனவே முஸ்லீம் மக்களை விழிப்பூட்டி “ஷரியா” சட்டத்திற்கு விரோதமாக கொண்டு வரப்போகும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்க்கான நடவடிக்கைகளை எடுப்பது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மார்க்க கடமையாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் ஹாஜியார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.