தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை அடக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி, மேலும் தெரிவித்துள்ளதாவது,
தினமும் உழைத்தாலும் வாழ்க்கையில் உயர முடியாத நிலையிலே தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துப் புரட்சி ஏற்பட்டதாலே உலகெங்கும் “மே தினம்” கொண்டாடப்படுகிறது.
ஊர்வலங்கள், கூட்டங்களால் விழிப்பூட்டப்படும் இவர்களின் இன்றைய தினம் (01) கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுக்கிடக்கிறது. இந்நிலை தொழிலாளர்களை மாத்திரமல்ல, முதலாளிமார் உள்ளிட்ட சகலரையும் வீட்டுக்குள் விலங்கிட்டுள்ளது. இருந்தபோதிலும், தேசத்தின் வருமானத்துக்கு முதுகெலும்பாகவுள்ள தொழிலாளர் படையை நாம் மறக்க முடியாது .
கூலி வேலை செய்வோரை மாத்திரம் சில பொருளாதாரக் காரணிகளுக்காக ஒதுக்கிவிட்டு, சுரண்டல்களில் ஈடுபடும் அவல நிலைமைகளை இல்லாதொழிப்பதே இத்தினத்தின் சிறப்பம்சமாகும்.
அரசியல் விளம்பரங்களுக்காக அரங்கேற்றப்படும் மே தினங்களைத் தவிர்த்து, அர்த்தமுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே தொழிலாளர் சமூகத்திற்கு நாம் செய்யும் கைம்மாறாக இருக்கும்.
முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த தொழிலாளர் வர்க்கம், இன்று சர்வாதிகார அரசியலுக்கு எதிராகவும் போராட வேண்டியேற்பட்டுள்ளது. இன வேறுபாடுகளின்றிய நிவாரணங்கள், சேவைகளே உழைப்பாளிகளை உற்சாகப்படுத்தும்.
“கொவிட் – 19” கொடூரங்களிலிருந்து முற்றாக விடுபடுவதற்கு முன்னர் தேர்தலுக்கு அவசரப்படுவதும், அரசியல் நோக்கிலான கைதுகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையிலும், தொழிலாளருக்காக குரல் கொடுப்பதை எங்களால் நிறுத்த முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமாக உழைக்கும் எமது கட்சி, நாளாந்த உழைப்பாளர்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் குரல் கொடுக்கும்.
எனவே இத்தினத்தை (01) ஊர்வலங்கள், மேள தாளங்களால் கொண்டாடாது உணர்வு ரீதியாகக் கொண்டாடுவதே சிறப்பானது.