மருதமுனை மக்கள் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தைப் பெறமுடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் வை.கே.ரஹ்மானை ஆதரித்து, நேற்று மாலை (23) மருதமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுக்கையில்,
“மருதமுனை மக்கள் அயல் கிராமங்களில் உள்ள வேட்பாளர்களையே காலாகாலமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றீர்கள். ஆனால், இங்கு எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. இதனை இளைஞர்கள் முகப்புத்தகங்களில் எழுதிவருகின்றனர். இந்நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தல் உங்களுக்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஆகும்.
ஏனைய கட்சிகளில் வெல்ல வேண்டுமென்றால், 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும். ஆனால், எமது கட்சியில் 10,000 வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுக்கொள்வாரானால், அவர் இலகுவாகத் தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இது உங்கள் ஊருக்கான சந்தர்ப்பமாகும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருதமுனை மக்கள் ஒன்றுதிரண்டு, ஒற்றுமையாக வாக்களித்தால், நீண்டகால அரசியல் அதிகாரம் எனும் வெற்றிடத்தை இலகுவில் நிரப்ப முடியும்” என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உட்பட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாரை பிராந்திய நிருபர்