தேசிய அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்காரர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறாது. மோசடிக்காரர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளதாகக் கூறப்படுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவிகளை வழங்கியமைக்கு பொறுப்புகூறவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கையை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிக்காரர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளன. இவ்வாறு இரண்டு கட்சிகள் ஒன்றிணைவதும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கம் என்பதும் வரலாற்றுபூர்வமாக இதுவே முதற்தடவையாக இடம்பெற்றுள்ளது. இதனூடாக நாட்டிற்கு புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும்.
தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாட்டில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது பிரதான இலக்காகும். இதற்கமைய கல்வி அமைச்சர் என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்தோடு நாட்டின் கல்வித்துறைக்காக புதிய கொள்கையொன்றையும் தயாரிக்கவுள்ளோம். இதற்கான ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாகவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவாதாகவும், மோசடிக்காரர்களுக்கு தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மோசடிக்காரர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி ஆதரவாளர்கள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் பரவலாக எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிராகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அளித்த வாக்குறுதிக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற மனப்பான்மைக்காகவும் நாட்டின் நலனை பிரதான இலக்காக கருத்திற் கொண்டுமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கத்தை நிறுவதற்கு இணங்கியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் பட்டியலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தீர்மானித்தார். இருந்தபோதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அமைச்சுப் பதவிகளை பெறுகின்றவர்கள் தொடர்பான பட்டியலை கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்தார்.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தில் ஊழல் மோசடிக்காரர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ பொறுப்புக் கூற முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூறவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கையை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பழி சுமத்துவதனை எந்த சந்தர்ப்பத்திலும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.