100 நாட்கள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போல எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். அந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதை விடவும் மூன்று மடங்குகளால் விலைகள் குறையும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28) நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இது மக்களுடைய அரசாங்கம் என்று எதிர்காலத்தில் மக்களுக்கு தெரியவரும். முன்னர் இருந்த அரசாங்கத்தில் செய்ய முடியாததை எவ்வாறு இந்த புதிய அரசாங்கம் செய்கின்றது என்று பொதுமக்கள் சந்தேகிக்கக்கூடும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலும் அவரது குடும்பத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட வீண் செலவுகளை மீதப்படுத்தியே இடைக்கால வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
அவர், அவரது பதவிக்காலத்தில் 1,800 வாகனங்களை பயன்படுத்தியுள்ளார். உலகத்தில் எங்குமே இல்லாத அரசியல் தலைவரை போலவே மஹிந்த செயற்பட்டார்.
மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றிருந்தால் குறைந்தது 650 மில்லியன் ரூபாய் அவருடைய பதவி பிரமாணத்துக்கு மாத்திரம் செலவு செய்திருப்பார். தலதா மாளிகைக்குச் சென்றிருந்தால், 300 மில்லியன் ரூபாயும் ஐனாதிபதி செயலகத்துக்கு செல்வதற்கு குறைந்தது 100 மில்லியன் ரூபாயையும் செலவு செய்திருப்பார். இவ்வாறான வீண் செலவுகளை மிச்சப்படுத்தியே நாம் இனிவரும் காலங்களில் ஆட்சிசெய்யபோகின்றோம்.
தற்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் அவர்களுடைய வேலைகளை சுயமாக செய்ய முடியும். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படமுடியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் ஊழல்கள் அனைத்தும் வெளிவந்துகொண்டிருக்கும் இந்நிலையில், ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இந்த அரசாங்கம் இன்னும் 03 மாதங்களுக்கு மாத்திரமே இருக்கும் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். இவர்களை கைதுசெய்யுமாறு மக்கள் கோருகின்றனர்.
தப்பு செய்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் வெள்ளை வேன் ஒன்றை கொண்டு சென்று தூக்கிக்கொண்டு வருவதற்கு இது ஒன்றும் மஹிந்த அரசாங்கம் இல்லை. இது மைத்திரி அரசாங்கம்.
இருவருக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும். வேறுபட்ட அரசாங்கமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம். போகப்போக அனைவருக்கும் இது புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.