Breaking
Sun. Jan 12th, 2025
-நேர்காணல் முஹம்மத் அஷ்ரப்-
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரவரிசையை 16000வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுபவருமான, கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களை நாங்கள் சந்தித்தோம்.
01. கல்வி, அபிவிருத்தி மற்றும் அரசியல் விடயங்களில் தற்காலத்தில் இப்பிராந்தியத்தில் அதிகம் பேசப்படும் உங்களைப்பற்றியும் உங்களது கல்வி நிலை பற்றியும் கூறுங்கள்
பதில்:-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் பிறந்த நான், சம்மாந்துறை மகளிர் கல்லூரியிலும் அதேபோன்று சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயத்திலும் எனது ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்டு அரசாங்க புலமைப்பரிசில் பெற்று, சோவியத் யூனியனில் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் கலாநிதிக்கான கற்கைநெறியையும் பூர்த்தி செய்தேன். எனது கற்றல் காலப்பகுதியில் பொருளாதாரத்துறையில் பல்வேறு முன்னடைவுகளைப்பெற்றேன்.
பின்னர் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கற்பித்தல் பணிகளைத்தொடர்ந்தேன். அவ்வேளையில் பகுதித்தலைவர், பீடாதிபதி மற்றும் உபவேந்தர் என்ற அளவுக்கு என்னுடைய பணிகளைத் தொடர்கிறேன்.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கற்பித்தல் பணிகளைத்தொடர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எனது கலாநிதி பட்டப்படிப்பின் பின்னரான பட்டப்படிப்பை இங்கிலாந்தில் பயின்றேன். அது அபிவிருத்தி தொடர்பான கற்கைநெறியாக இருந்தது. அத்துடன் காலத்துக்குகாலம் பல்வேறு நாடுகளில் குறுகிய மற்றும் நடுத்தர கால கற்கைநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளேன். அதேவேளையில் சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் பெற்றுள்ளேன். குறிப்பாக சர்வதேச சமாதானத்துக்கான தூதுவர் என்ற கௌரவ பட்டம் கொரியா அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று மலேசியாவில் சிறந்த கல்விச்சாதனையாளர் என்ற விருதும் கடந்த 2014ம் ஆண்டு கிடைக்கப்பெற்றது. இவ்வாறானதொரு நிலையில் தான் என்னுடைய தனிப்பட்ட மற்றும் கல்வி நிலை செல்கின்றது.
02. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உபவேந்தரான நீங்கள் பல்கலைக்கழகத்தின் உட்கட்டுமானம், ஆளணியை அதிகரித்தல்,சர்வதேச தொடர்புகளை மேன்படுத்துதல் பல்கலைக்கழக தரவரிசையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றதே அதுபற்றிக் கூறுங்கள்?
பதில்:-
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் 1996ம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்ட நான், இன்றுவரைக்கும் அதாவது சுமார் 19 ஆண்டுகளாக அங்கு கடமையாற்றிக்கொண்டு வருகின்றேன். எனது இந்தக் காலப்பகுதியில் அங்கு இணைகின்ற போதே எனக்கு சிரேஷ்ட விரிவுரையாளராகவும் அதேபோன்று சமூக விஞ்ஞானத்துறைக்கான பகுதித்தலைவராகவும் செயற்பட எனக்கு பதவிகள் வழங்கப்பட்டது. அவைகளை வைத்துக்கொண்டு பல்கலைக்கழக அபிவிருத்திக்கும், அதேபோன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டமைப்புகளை சீராகச்செய்வதற்கும் எனது உச்ச பங்களிப்பை வழங்கினேன். அதன்காரணமாகத்தான் இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு உயர்வுகள் எனக்குக்கிடைத்தன. குறிப்பாக துறைத்தலைவராக இருந்த நான் பீடாதிபதியாக தரமுயர்த்தப்பட்டேன். அவ்வேளையில் உலக வங்கியூடாக நிதியுதவிகளைப் பெறுவதற்காக பல்வேறு செயற்திட்டங்களை வடிவமைத்து அதனூடாக எங்களது பல்கலைக்கழகத்துக்கு சுமார் 300 மில்லியனுக்கு அதிகமான பணத்தைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் எனக்கும் அப்போது என்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினரையுமே சாரும்.
குறித்த நிதியுதவியின் ஊடாகவே குறிப்பாக சமூக விஞ்ஞானத்துறை அதேபோன்று கலை கலாச்சார பீடத்தில் இருக்கின்ற மொழித்துறை மற்றும் ELTU போன்ற ஏனைய துறைகளில் இருந்தும் தங்களது கலாநிதி கற்கைநெறிகளை பூர்த்திசெய்துள்ளனர். அதுமாத்திரமல்லாது கணணி அபிவிருத்தி மற்றும் ஊழியர்களுக்கான அவர்களது தகுதிகளை மேம்படுத்துவதர்க்கான பயிற்சிகள், பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பினை மேன்படுத்துவதற்காகவும் குறித்த நிதி பாவிக்கப்பட்டது.
வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் அத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டோம். அதேபோன்று தொழில்சார் நிறுவனங்களோடு சில தொடர்புகளையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் எங்களுக்கு ஏற்பட்டது.
கொழும்பில் இருக்கின்ற எங்களது கல்விநிலையத்தில் வைத்து மூன்றாம் வருட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி அவர்களது ஆற்றலை அதிகரித்தோம். அதனூடாக பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தனியார்துறைகளிலும் ஏனைய உயர் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
2009ஆண்டிலிருந்து இன்றுவரைக்கும் உபவேந்தராக கடமையாற்றுகின்ற பாக்கியமும் எனக்குக் கிடைக்கப்பெற்றது. உபவேந்தர் தெரிவில் இரண்டு சந்தர்ப்பத்திலும் எனக்கு அதிகமான வாக்கு ஆதரவும் கிடைத்தது. இந்தகாலகட்டத்தில் இப்பல்கலைக்கழகத்துக்கு பல்வேறுபட்ட அபிவிருத்திகளை என்னால் செய்ய முடிந்தது. அதில் குறிப்பாக கல்விசார்ந்த ஊழியர்கள் அவர்களது கலாநிதி கற்கைகள் மற்றும் பட்டப்பின்ப்டிப்புகளை நிறைவு செய்துள்ளனர். அதற்காக அரச மற்றும் ஏனைய நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுத்தோம். இவர்களில் பெரும்பாலானோர் தேசிய மற்றும் சர்வதேசப்பல்கலைகழகங்களில் அவர்களது கல்வியைக் கற்றுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு சார்ந்த விடயத்தில் எனது காலத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எங்களது பல்கலைக்கழகம் 2009ஆண்டிற்கு முதல் சுமார் 10 ஏக்கர் விஸ்த்தீரனத்தில் தான் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் பல்கலைக்கழகத்துக்குரிய முழு நிலப்பரப்பும் அதாவது சுமார் 240 ஏக்கர் நிலப்பரப்பும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு விடயத்தில் அரச நிதியின் ஊடாகவும் அதேபோன்று சர்வதேச நிதிகளின் ஊடாகவும், சில தனியார்களின் நிதியுதவிகளின் ஊடாகவும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்தது.
குறிப்பாகக் கூறுவதானால் என்னுடைய காலப்பகுதியில் அதாவது 2013ம் ஆண்டு பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஐந்து திணைக்களங்கள் உள்ளடங்கியுள்ளன. இதில் சுமார் 300க்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்கின்றார்கள் இதில் 20 க்கும் அதிகமான விரிவுரையாளர்களும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
மற்றுமொரு முக்கியமான அபிவிருத்தியின் மைக்கல்லாக நாங்கள் உருவாகியது பல்கலைக்கழகத்துக்குத் தேவையான பொதுவான நூலகம். அதற்க்கு இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தபகரான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களது ஞாபகார்த்தமாக பெயர் நாமத்தை இந்த நூலகத்துக்கு இட்டுள்ளோம். நூலகமும் பொறியியல் பீடமும் நமது நாட்டின் அப்போதைய ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இவ் வாசிகசாலையானது பல்கலைக்கழகத்தின் முகவெத்திலையாக எல்லோராலும் பேசப்படுகிற ஒன்றாக இருப்பது மிகுந்த பெருமையத் தருகின்றது.
அரபு இஸ்லாமிய பீடத்துக்கான கட்டிடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அத்துடன் 1200 மாணவர்களுக்கான விடுதிவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1500 மாணவர்கள் தங்கி கற்பதற்கான விடுதிவசதிகளுக்கான கட்டிட நிர்மானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இவ்வாறான விடுதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையினால் வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்து இங்கு கல்விகற்கும் மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர். சாதாரணமாக ஏனைய பல்கலைகழகங்களில் முதலாம் வருட மாணவர்களுக்கும் இறுதிவருட மாணவர்களுக்குமே விடுதிவசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் நாங்கள் எல்லாமாணவர்களுக்கும் விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
2020 ஆண்டில் சுமார் 8000 மாணவர்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் குறித்த அந்த எதிர்பார்ப்புக்கு அமைவாக விடுதிவசதி உள்ளிட்ட அனைத்துவசதிகளையும் மேன்படுத்துவதர்க்கான திட்டங்களைத்தீட்டி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். இத்திட்டத்தோடு அமைந்ததாக விரிவுரையாளர் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கான விடுதி வசதிகளையும் ஏற்படுத்தும் நோக்கில் அதற்க்கான திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றோம்.
மாணவர்களின் நலன்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அதற்க்கான நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனூடாக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றோம். மாணவர்களும் ஊழியர்களும் பயன்படக்கூடியவாறான வைத்திய நிலையம் ஒன்று ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய நிலையம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சிகிச்சை பெறும் அளவுக்கு அது செயட்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் சகலவசதிகளையும் உள்ளடக்கியதாக விரிவுரையாளர் மண்டபாம்,வாசிகசாலை உள்ளடங்கலாக நிர்வாகக் கட்டிடத்தொகுதி, ஆய்வுகூட கட்டிடத்தொகுதி என்பன பூர்த்தியடையும் நிலையில் உள்ளன. மற்றும் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கான விடுதிவசதிகளுக்காக பாரியளவில் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இங்கு விளையாட்டு மைதானம் ஒன்று இருக்கின்றது அதனை ஆசிய தரத்துக்கு அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கூடிய விரைவில் அதற்க்கான ஒப்பந்த வேலைகள் கையளிக்கப்படவுள்ளன. குறித்த மைதானத்தில் சகலவிதமான விளையாட்டுக்களையும் விளையாடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் 1000க்கு மேற்பட்ட ரசிகர்கள் விளையாட்டுக்களைக் கண்டுகளிக்கக்கூடிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
விசேடமாக பொறியியல் பீடத்துக்கு என ஆய்வுகூடம் ஒன்று நிர்மானிக்கப்பட்டு அதன் முதற்கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதுமாத்திரமின்றி பொறியியல் பீடத்துக்கான ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான ஒலுவில் மகாபொல பயிற்சி நிலையத்தின் கட்டிடங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெறப்பட்டிருக்கின்றது. அதனூடாக மாணவர்கள் சிறந்த பயனைப் பெற்றுவருகின்றார்கள்.
பல்கலைக்கழகத்தின் குறையாகக் காணப்பட்ட மாணவர் மற்றும் ஊழியர்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கான கட்டிட வசதிகளுக்காக ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக மிகவிரைவில் அடிக்கல்லை நடவுள்ளோம். சுமார் 400 மாணவர்களும் ஊழியர்களுமாக ஒரேநேரத்தில் அமரக்கூடியவாறு அது திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு போன்ற நிகழ்வுகளை நடாத்தக்கூடிய வசதிகள் இல்லாதிருந்தன அந்தக்குறையையும் நிவர்த்திக்கும் வகையில் அதற்க்கான கட்டிடத்தொகுதி ஒன்றும் நிர்மானிப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு கூடிய விரைவில் அதுவும் கொடுக்கப்படவுள்ளது.
அதிக பரப்பளவைக் கொண்ட எமது பல்கலைக்கழத்துக்கு போக்குவரத்துக்களை மேற்கொள்ள சரியான முறையில் பாதைவசதிகள் இல்லாதிருந்தன அதனை நிவர்த்திக்கும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் பாதைகள் அமைக்கப்பட்டு கர்பட் மூலம் செப்பனிட்டுள்ளோம். அத்துடன் குடிநீர் வசதிகள் பூங்காக்கள் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளோம். எங்களது பல்கலைக்கழத்தை அலங்கரிப்பதற்காக மரக்கன்றுகளையும், செடிகளையும் உருவாக்குவதற்காக எங்களுக்கென நாற்றுமேடை வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். இதிலிருந்து கிட்டத்தட்ட 5000க்கு மேற்பட்ட மரங்களை என்னுடைய காலப்பகுதியில் நட்டிருக்கின்றோம்.
எல்லாவற்றையும்விட சுமார் எட்டுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் நமது பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து கற்கக்கூடிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்வுறுகின்றேன்.
மாணவர்களை ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபடுத்த சமய வழிபாட்டுத்தலங்களையும் ஏற்படுத்தியுள்ளோம் விசேடமாக பள்ளிவாசல் ஒன்றை நிர்மானித்துவருகின்றோம் அது இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் பௌத்த மாணவர்களுக்காகவும், இந்து மாணவர்களுக்காகவும் அவர்களுக்கான வழிபாட்டுத்தலங்களை உருவாக்கியுள்ளோம்.
கற்றல் நடவடிக்கைகளில், கதறலுடன் மட்டும் நின்றுவிடாமல் ஆய்வுநடவடிக்கைகளையும் அதிகமாக மேட்கொண்டுவருகின்றோம். குறிப்பாக இப்பல்கலைக்கழகத்தில் நான்கு சர்வதேச ஆய்வுமாநாடுகளை நடாத்தியுள்ளோம். இதனூடாக இவ்வாறான செயற்பாடுகளிலும் எங்களது பல்கலைக்கழகம் சழைத்ததல்ல என்பதைக் காட்டியுள்ளோம்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வு நடவடிக்கைகள் காரணமாக அவர்களது எழுத்தாற்றல் வளர்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக எங்களது பல்கலைக்கழகத்தின் தரம் உயர்ச்சியடைந்துள்ளது. நான் இப்பல்கலைக்கழகத்தை பாரமேடுத்தபோது தென்கிழக்குப்பல்கலைக்கழகத்துக்கு என்று சர்வதேச ரீதியில் ஒரு இடம் இருக்கவில்லை. 2010 ஆண்டில் 16000வது இடத்தில் இருந்தது ஆனால் அதனை இன்று 8000வது இடத்துக்கு எனது காலப்பகுதியில் முன்னேரவைத்துள்ளோம்.
தற்போது மாணவர்களையும் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாக உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம்.
என்னுடைய காலப்பகுதியான 2009 தொடக்கம் நேற்றுவரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன அதனூடாக பல்வேறுபட்ட புதிய பாடத்திட்டங்களும் உருவாகும். குறிப்பாக கலைத்துறையில் புவியியல்துறைக்கான ஒரு திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது அரசியல் விஞ்ஞானத்துறைக்கான திணைக்களத்துக்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. மற்றும் பொருளாதார திணைக்களத்துக்கான செயற்திட்ட அறிக்கையும் நாங்கள் அனுப்பியுள்ளோம் அதற்க்கான அனுமதியும் மிகவிரைவில் கிடைக்கும். முகாமைத்துவ பீடத்தில் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்துக்கான அனுமதி கடந்த ஆண்டு எங்களுக்குக் கிடைத்தது.
கலைத்துறையில் கற்கும் மாணவர்களின் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக புதிய பாடநெறிகளான ஆங்கிலத்தில் விசேட கற்கைநெறி, கணணி பட்டப்படிப்பு மற்றும் QS போன்ற கற்கை நெறிகளை போதிப்பதற்கான அனுமதியும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.இதுவும் இப்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் பாரிய சாதனையாகக் காணப்படுகிறது.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் அடுத்த வருடத்தில் இருந்து தொழில்நுட்பவியல் கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது அதற்காக 100 க்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இவை எல்லாவற்றையும் பார்க்கின்றபோது எங்களுடைய பல்கலைக்கழகம் கற்றல் கற்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி விடயங்களில் முன்னேறியுள்ளது என்றே கூறவேண்டும்.
அத்துடன் சர்வதேச பல்கலைகழக தரவரிசையிலும் இப்பல்கலைக்கழகம் எனது காலத்தில் 16000 வது இடத்தில் இருந்து 8000வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சியான விடயமே. அத்துடன் கடந்தவருடத்தில் எங்களது பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய மாணவர்களில் ஆறுமாதகால இடைவெளியில் சுமார் 70 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் தொழில் பெற்றுள்ளனர்.
இன்னுமொரு விடயத்தை நான் குறிப்பிட்டுக்கூற வேண்டும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆளணி தொடர்பான அபிவிருத்தியில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம் அது கல்விசார்ந்த அணியில் கலாநிதிகள் மற்றும் பட்டப்பின்படிப்புகள் என பல்வேறுபட்ட விதத்தில் கல்விசார் ஆளணியின் தரத்தை உயர்த்தியுள்ளோம். அதேவேளை எங்களது கல்விசார சமூகத்துக்கும் கூடுதலான பயிற்சிகளை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.
அதற்காகவேண்டி எங்களது பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான மத்தியநிலையம் ஒன்றினை அமைத்திருக்கின்றோம் அந்த நிலையத்தினூடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எங்களது ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்கிவருகின்றோம். ஒருசில ஊழியர்களை வெளிநாட்டிலும் ஏனைய ஊழியர்களை உள்நாட்டிலும் அவர்கள் சார்ந்த துறையில் பயிற்றுவித்து வருகிறோம். அதில் ஊழியர்களை வெளியிடங்களுக்கு அழைத்து அவர்களைக் குழுக்களாகப் பிரித்து வெளியில் உள்ள சிறந்த முகாமையாளர்களைக் கொண்டு பயிற்றுவித்து வருகின்றோம்.
இதில் என்னுடைய காலப்பகுதியில் 150 க்கும் அதிகமான கல்விசார ஊழியர்கள் நிரந்தரநியமனத்தைப் பெற்றுள்ளதை ஓர் உயர்வான விடயமாகப் பார்க்கின்றேன். இதற்க்கான காரணம் என்னவெனில் பல்கலைக்கழகத்தை ஒரு அமைதியான சூழலில் அதனூடாக கல்விசார் சமூகமும் கல்விசார சமூகமும் தந்த பங்களிப்பின் காரணமாக புதிய பீடங்கள், புதிய திணைக்களங்கள் என்பன உருவாக்கப்பட்டதால் இவைகளுக்கான ஆளணிகளை உயர்கல்வி அமைச்சு தந்ததன் காரணமாகவே இவ்வாறான நியமனங்களை வழங்கமுடிந்தது.
நிர்வாக ரீதியாக நாங்கள் மேற்கொண்ட சில செயற்பாடுகளையும் நான் சொல்ல வேண்டும் அதாவது பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் ஒலுவில், சம்மாந்துறை மல்வத்தை கொழும்பு போன்ற பிரதேசங்களில் காணப்பட்டது அதற்க்கான ஆவணங்கள் சரியான முறையில் காணப்படவில்லை. அந்த ஆவணங்களைக் கூட எனது காலப்பகுதியில் செய்யக்கூடியதாக இருந்தது. சொத்துக்களுக்கான குறிப்பாக உறுதி, கட்டிடநிர்மானத்துக்கான அனுமதிப்பத்திரம், பல்கலைக்கழகத்துக்கான வரைபடம் போன்றவற்றை பூரணப்படுத்திய பெருமையும் எங்களுடைய காலப்பகுதியையே சாரும்.
பல்கலைக்கழகத்துக்கான கணக்கு நடவைக்கைகள் கூட எங்களது காலத்தில் சீர் செய்யப்பட்டு அதற்க்கான அனுமதியை எங்களது மேலிடங்களில் இருந்து பெற்றிருக்கின்றோம். அதேபோன்று பல்கலைக்கழகத்தின் ஆண்டு நடவடிக்கைகளுக்கான கணக்குகள் மற்றும் சகலஅம்சங்களையும் உள்ளடக்கிய கணக்கறிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்தினாலும் ஏனைய அரச தாபனங்களினாலும் அனுமதிக்கப்பட்ட கணக்கறிக்கை இன்று பல்கலைக்கழகத்தில் இருப்பதனையிட்டு நிதிசார்ந்த விடயத்திலும் நாங்கள் பெருமைப்படவேண்டியிருக்கின்றது.
இப்போது கணணி மயப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிருவாக உத்தியோகத்தர்கள் என்னுடன் இணைந்து செயற்பட்டதையிட்டும் பெருமைப்படுகின்றேன்.
மாணவர்களையும் சமூகத்தையும் ஒன்றிணைப்பதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் உதாரணமாக இரத்ததான நிகழ்வுகள் போன்றவற்றை செய்து வருகின்றோம். அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இருக்கும் பலரை அழைத்து அவர்களது வாழ்வாதாரங்களை உயர்த்தக்கூடிய விதத்தில் பயிற்சி பட்டறைகளையும் நடாத்தி வருகின்றோம்.
மாணவர்களையும் பலகலைக்கழக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாக மாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அதிலும் வெற்றிகண்டுள்ளோம். உதாரணமாக சிரமதான நடவைக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
03. உங்களது இரண்டாவது கட்ட உபவேந்தர் பதவிக்காலம் முடிவுற இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றதே…
பதில்:-
அண்மைக்காலங்களில் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஏனனில் என்னுடைய இரண்டாவது உபவேந்தர் காலப்பகுதி இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நிறைவடைய உள்ளதால் அதன் பின்னர் நான் அரசியலுக்குள் பிரவேசிக்க இருப்பதாக பல்வேறுபட்ட செய்திகளை என்னால் வாசிக்கக்கூடியதாக இருந்தது. அதுதொடர்பாக வெளிப்படையாக கூறுவதாக இருந்தால் இன்று சம்மாந்துறையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றுக்கான இடைவெளி காணப்படுகின்றது அதற்க்காகவேண்டி பல்வேறு தரப்பினரும் பலவேறு முஸ்தீபுகளைச் செய்து கொண்டுருக்கிரார்கள் இருப்பினும் அதிகாமான சம்மாந்துறை மக்கள் விசேடமாக உலமாக்கள், கற்றவர்கள் முதல் வியாபாரிகள், இளைஞர்கள், விவசாயிகள், பாமரர்கள் மாதர் அமைப்புக்கள் வரை எனக்கு பல்வேறு அளுத்தங்களைத்தருகிரார்கள். இருந்த போதும் இவைகள் தொடர்பான எந்த இறுதி முடிவையும் இதுவரையும் எடுக்கவில்லை என்றே கூறுவேன்.
எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு தேவை இருந்து சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாராளமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு நான் தகுதியானவன் என கருதப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக அதைப்பற்றி சிந்திக்க இருக்கின்றேன் ஆனால் இதுவரைக்கும் எதுவித இறுதி முடிவினையும் எடுக்கவில்லை
04. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதற்க்கு எதிராக முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதே அதுபற்றியும் கூறுங்கள்
அண்மைக்காலமாக சில ஊடகங்கள் வாயிலாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன எது எவ்வாறாக இருந்தாலும் கடந்த கால இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றைப் பார்க்கின்ற போது உபவேந்தர்கள் தங்களது காலப்பகுதிகளை முடித்துக்கொண்டு செல்கின்ற வேளைகளில் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அவர்கள் மீது பல்வேறுபட்ட அபாண்டங்களைச்சுமர்த்தித்தான் அவர்களை வெளியில் அனுப்பினார்கள் எனக்கு நினைவிருக்கிறது ஒருதடவை பதிவாளர் ஒருவருக்கு கூரையைப் பிரித்து பூச்சட்டியை எரிந்து துன்புறுத்திய சம்பவங்களும் இருக்கின்றன. பட்டாசுகளைக் கொளுத்திக்கூட அனுப்பி இருக்கின்றார்கள் எனவே இது புதிய விடயம் ஒன்றல்ல. காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் காலத்துக்குக் காலம் இவ்வாறான செயல்களைச் செய்து வருகிறார்கள்.
நானும் அறிந்தேன் இப்பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, அவைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிச்சயமாக நாங்கள் பெருமைப்படுகின்றோம் இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதையிட்டு. இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக நானும் எனது நிர்வாகமும் ஒத்துழைப்பு வழங்கி உண்மையை உலகுக்கு கொண்டுவருவோம்.

Related Post