ஊவா மாகாணத்தில் எளிமையான விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (25) பதுளை மாவட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை நகரத்திற்கு அருகில் மகாஉல்பத்த மற்றும் தென் கெபில்லவெல கிராம சேவகர் பிரிவிற்கான மகாஉல்பத்த – நாயபெத்தவத்தை வரையிலான இடமொன்றிலே இந்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஹப்புத்தளை தொடலாகலவத்தை பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அங்கு மண் சரிவு ஏற்படும் ஆபத்து காணப்பட்டதோடு, 33000 உயர் மின் கம்பங்களை நீக்குவது கடினம் என்பதனை கருத்தில் கொண்டு அந்த எண்ணத்தை மாற்றியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 1300 மீட்டர் நீளம் எனவும், அது பண்டாரவளை – கொஸ்லந்த வீதியில் இருந்து 3.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
48 பயணிகள் பயணிக்க கூடிய விமானத்தை தரையிறக்கவும், புறப்பட கூடிய வகையிலும், குறித்த விமான நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த விமான நிலையத்தில் இருந்த 30 நிமிடத்திற்குள் இலங்கையில் எந்த ஒரு இடத்திற்கும் பயணிக்க முடியும்.
குறித்த விமான நிலையத்திற்காக அறிக்கை மற்றும் மதிப்பீடுகளை பெற்றுக் கொண்டு இந்த வருடத்தில் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.