துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
ஊவா மாகாண சபையை அரசு வென்றெடுக்க முஸ்லிம்களின் வாக்குக்களை கிஞ்சித்தும் கணக்கெடுக்காது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையே அரசு குறிவைத்திருந்ததனை பதுளை மாவட்டத்தில் அரசு முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்காதது தெளிவாக சுட்டி நின்றது.முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதனை அரசும் நன்கே அறியும்.அப்படி இருக்க அரசு முஸ்லிம்களிடம் தனது நேரத்தினை வீண் விரயம் செய்யாது பெரும்பான்மை இன மக்களை குறிவைத்து தங்களது காய்களை நகர்த்துவதே அரசின் வெற்றி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தப் போகிறது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாய் கொண்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் பல வருடமாக கனவு கொண்டிருக்கும் கரையோர மாவட்டக் கோரிக்கையை திடீர் என தர முடியாது என அரசு போட்டு உடைத்துள்ளது.இது எதிரியாய் மாறிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமயவை நாங்களும் உங்கள் பங்காளியே என்பதனை நிரூபித்து மறு பக்கம் சாயாது தடுக்கும் உத்தியாக இருக்கலாம்.பெரும்பான்மை இன மக்களின் நலனுக்காய் அரசு முஸ்லிம்களை எதிர்க்கிறது எனவே எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்கள் அரசை எதிர்ப்பார்கள்.அதற்கு நாம் கை கொடுக்க வேண்டும் என்ற மனோ நிலையை பேரின மக்களிடம் அரசு உருவாக்கும் அடிப்படை வித்திடலாகவும் இது இருக்கலாம்.
மேலும்,முஸ்லிம்களின் பெரும் பான்மை ஆதரவைக் கொண்ட மு.கா ஆதரவினை உடைக்கும் முயற்சியின் ஆரம்பமாவகவும் இது அமையலாம்.இதன் மூலம் மு.கா இனை மக்களிடையே அரசு மிகவும் நகைப்புக்குள்ளாக்கி இருப்பதும் மறுக்க முடியாததே.ஜனாதிபதித் தேர்தலை வைத்து மு.கா எவ்வாறு கரையோர மாவட்டக் கோரிக்கையை பெற முயசிற்கிறதோ அதே போன்று கரையோர மாவட்டக் கோரிக்கையை வழங்கக் கூடாது என எத்தனை நபர்கள் கூறினார்களோ?எத்தனை கட்சிகள் வலியுருத்தினவோ?பெரும்பான்மை இனத்தை திருப்தி செய்ய அரசின் நிர்ப்பந்தத்தின் விளைவுகளில் ஒன்று தான் கரையோர மாவட்ட நிராகரிப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.