Breaking
Tue. Dec 24th, 2024

டைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக் கொள்வதிலுள்ள சாத்தியப் பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக மலையக முஸ்லிம் கவுன்சிலின் (UCMC) அழைப்பில் பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, வெளிமட எப் சி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், “ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய ரவூப் ஹக்கீமுடன் இணைந்து செயற்பட தயார்.” என்று தெரிவித்தார்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை எல் எஸ் ஹமீது . முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் பாய் ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ ல சு கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள், “ எமது கட்சி இப்பிரதேசத்தில் போட்டியிட்டு எமது கட்சியின் பிரதிநிதியொருவரை பெற்றுக்கொள்ளும் நோக்கம் எமக்கு இருக்க வில்லை.

 ஊவா முஸ்லிம்கள் மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதிதுவமொன்றை பெறாமல் பல்வேறு வகையான இன்னல்களுக்கும் ஓரவஞ்சனைகளுக்கும் உட்பட்டு வருவதாகவும், இந் நிலையிலிருந்து ஊவா முஸ்லிம்கள் மீட்சி பெறவேண்டுமாயின் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைத்து ஒரு பொது சின்னத்தில் போட்டியிட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதுடன் நாட்டில் ஏனைய பிரதேசங்களிலும் இம்முறையை நடைமுறை படுத்தலாம் என்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் UCMC தலைவர் முஸம்மில் அவர்கள் என்னை பல முறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

இதற்கிணங்க கடந்த இரண்டு நாட்களாக பதுளை மாவட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து பள்ளிவாயில் நிர்வாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அதிபர் ஆசிரியர்கள் இளைஞர்கள் ஆகியோருடன் நேரடியான பல கலந்துரையாடல்களை நடத்தினேன். இதன்போது நான் அறிந்து கொண்ட விடயங்கள் என்னை மிகவும் கவலை அடையச் செய்தது.

சில முஸ்லிம் கிராமங்களுக்கு 1977 க்கு பின் எந்தவொரு அரச நியமனகளும் கிடைக்க வில்லை. ஆகக் குறைந்தது ஒரு முஸ்லிம் இளைஞர் யுவதிக்காவது காரியாலய உதவியாளர், நூலக ,விஞ்ஞான ஆய்வுகூட உதிவியாளர் பாடசாலை காவலாளிகள் போன்ற தொழில்கள் கூட வழங்கப் பட்டில்லை. இதன்காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆடுமாடுகளை களவெடுத்து அடிக்கடி பொலிசாரால் கைது செய்யப் படுவதாக மிகக் கவலையுடன் தெரிவித்தார்கள்.

 17 வருடங்களுக்கு மேலாக ஒரு கம்பிக் கதிரையை கூட பெற்றுக்கொள்ள முடியாத பாடசாலைகள், சுற்றுமதில்கள் பாதுகாப்பு வேலிகள் இல்லாத, கூரைகள் ஒடிந்த பாடசாலைகள் பல கிராமங்களில் அநாதரவான நிலையில் காட்சியளிக்கின்றன.

 ஆசிரிய மற்றும் கட்டிட வளப் பற்றாக்குறையுள்ள பாடசாலைகள்.

 பர்தவுக்காகவும் ஆசிரிய நியமனகளுக்காகவும் நீதிமன்ற தீர்ப்புகளை நாடவேண்டிய நிலை.

சில்மியா புற எனும் முஸ்லிம் கிராமத்தில் குடிக்க ஒரு சொட்டு தண்ணீருக்காக பல வருடங்காளாக கஷ்டப் படும் ஏழை விவசாயிகள். இப்பிரதேசத்திட்கு குழாய் நீர் பெறுவதற்காக ஒரு தொண்டு நிறுவனத்தால் ஐம்பத்தி ஏழு இலட்ச ருபாய் நிதியுதவி பெறப்பட்டு குழாய்கள் பொருத்தப் பட்டு உரிய நீர்த்தாங்கிகள் மற்றும் கட்டுமான வேலைகள் செய்து பூர்த்தியாக்கப் பட்டும் கடந்த ஐந்து வருடங்களாக ஏமாற்றப் படும் முஸ்லிம்களின் பரிதாப நிலை..

 பதுளை டீன் பெனசி வர்த்தக நிலையத்தில் இனவாத கும்பல்களால் ஏற்படுத்தப் பட்ட அசம்பாவிதமும், அதை தொடர்ந்து ஜும்மா தினங்களில் பதுளை நகர வீதிகளில் ஊர்வலம் சென்ற இனவாதிகள் தொழுகை முடித்து வீதியில் சென்ற முஸ்லிம் சகோதரனையும் அவரது வாகனத்தையும் தாக்கி சேதப் படுத்தியது, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எதிராக போலீசில் புகார்பதிவு செய்யக் கூட முடியாத நிலை.

 பசறையில் நடைபெற்ற ஒரு கொலை நிகழ்வை முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்தி முஸ்லிம்களின் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தி பசறை வீதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஊர்வலம் சென்றது.· மஹியங்கனையில் கடந்த இருபத்தி ஏழு வருடங்களாக அல்லாஹ்வை சுஜுது செய்து தொழுகை நடத்திய பள்ளிவாசலில் பன்றியை வெட்டி எரிந்து அசிங்கப் படுத்தி சில நாட்களில் ஒரு மாகாண சபை உறுப்பினராலேயே அப்பள்ளியை நிரந்தரமாக மூடிவிட்டது.

 போன்ற பல துன்பகரமான நிகழ்வுகளை நேரடியாக அறிய முடிந்தது. நான் இம் மாவட்டத்தில் சென்ற இடமெல்லாம் தமது கஷ்ட துன்பங்களை முன்வைத்த முஸ்லிம் சகோதரர்கள் இதற்கான பிரதான காரணமாக இப்பிரதேசத்தில் சிறந்ததொரு முஸ்லிம் அரசியல் பிரதி நிதித்துவம் இன்மையை வெகுவாகவே சுட்டிக் காட்டினார்கள்.

 சுமார் ஐம்பத்தி ஏழாயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட பதுளை மாவட்டத்தில் ஒரு மாகாண சபை உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப் படுவதை வரலாற்று அனுபவமாக கூறுகிறார்கள். கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்து ஏமாந்து போனதாக கூறும் இவர்கள் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து ஓரணியில் இத்தேர்தலில் போட்டியிட்டால் தமது ஏகோபித்த ஆதரவை தருவதாக கூறுகிறார்கள். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஒரு சில சகோதரர்களையும் சந்திக்க கிடைத்தது.

 அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும், ஐக்கிய தேசிய கட்சியினதும் தீவிர ஆதரவாளர்களாகவும் அமைச்சர்களின் இணைப்பாளர்களகவும் உள்ளவர்கள். இவர்கள் முன்வைக்கும் பிரதான காரணம் முஸ்லிம்கள் தனியாக ஓரணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும்போது இனவாதம் மேலும் தலைதூக்கும். முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பெரும்பானமையினர் புறக்கணிப்பார்கள். ஆகவே நாம் அவர்களை சார்ந்து அரசியல் செய்வதே காலத்திற்கு பொருத்தமென கூறுகிறார்கள்.

 நாம் எமது பிரதிநிதித்துவம் ஒன்றை பெறுவதற்காக தனியாக ஒன்று சேர்வது ஒன்றும் நாட்டை பிரிக்கும் செயற்பாடு அல்ல. அவ்வாறு நினைத்து இருந்தால் கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அரவிந்த குமார் அவர்கள் 8600 வாக்குகளை பெற்று ஒரு உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டு தமது மக்களுக்கான சேவையை முன்னெடுக்க வில்லையா. அவ்வாறு அவர் செய்த காரணத்தால் இன்று தமிழ் சகோதரர்களின் வியாபார நிலையங்களை சிங்கள மக்கள் புறக்கணித்தார்களா. எமது மாவட்டத்தில் நாற்பதாயிரம் முஸ்லிம் வாக்காளர்களே உள்ளார்கள். நாம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று அம்மக்களுக்கு செவையாற்றுகின்றோம். இவ்வாறு எமது மக்களின் வாக்குகளை தனியாக வேண்டுவது ஒரு போதும் இனவாதமாகாது.

 ஆகவே மலையக முஸ்லிம் கவுன்சில் முன்வைத்துள்ள இப் பிரேரணை காலத்தின் தேவை எனக் கருதி இதற்கான எனது பூரண ஆதரவை நல்க நான் தயாராக உள்ளேன். எமது கட்சி பிரதி நிதித்துவம் ஒன்றை ஊவா மாகாண சபையில் பெறவேண்டிய நோக்கமோ தேவையோ கொள்கையளவில் எமக்கு இல்லை. ஆனால் இப்பிரதேச சகோதர முஸ்லிம்களின் காலத்தின் தேவை கருதி கட்சி பேதங்களை மறந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம்.

 மு கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எனக்கும் பல கருத்து முரண்பாடுகள் உள்ளது உண்மையே. அதனால் தான் நான் இன்னுமொரு கட்சியை உண்டாக்கி வேறாக செல்ல வேண்டிஎட்பட்டது. ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கென்று பிரச்சினைகள் வரும் போது நாம் ஒரே மேசையில் இருந்து கதைத்து கலந்தாலோசித்து செயல் பட எமக்கு மத்தியில் எந்த தடையும் இல்லை. ஆகவே எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலிலும் நாம் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.” என்றும் கூறினார்.

Related Post