Breaking
Sat. Dec 28th, 2024
எகிப்தின் மத்தியில் உள்ள ‘பாயும்’ நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து இதுவரை 1700 மம்மிக்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
75 அடி ஆழம் வரை பூமிக்குள் பள்ளம் தோண்டி இந்த மம்மிக்கள் புதைக்கப்பட்டுள்ளன. ரோமாபுரி அரசர்களின் கட்டுப்பாட்டில் எகிப்து இருந்தபோது இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெகு சமீபத்தில் 18 மாத குழந்தை மம்மியை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அப்பெண் குழந்தையின் இரு கைகளில் அணிந்துள்ள வளையல் மற்றும் கழுத்தில் அணிந்துள்ள நெக்லஸ் இன்றும் அப்படியே உள்ளது.
இது மட்டுமல்லாமல் ஏழு அடி உயர ஆண் மம்மியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக இவ்வளவு பேர் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டனர்? என்பது தான் மிகப்பெரிய மர்மமாக உள்ளது. கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் இவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது வரை எகிப்தில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. அந்த பகுதியில் சிறிய அளவிலான கிராமம் மட்டுமே இருந்திருப்பதற்கான தடயங்கள் உள்ள போது, இவ்வளவு அதிகமான மம்மிக்கள் எங்கிருந்து வந்தன? என்பதும் புரியாத புதிராக உள்ளது.
தலைமுடியை கொண்டு மம்மிக்கள் வகைப்படுத்தப்பட்டு கூட்டம் கூட்டமாக புதைக்கப்பட்டுள்ளனர். தலையில் மஞ்சள் நிறத்தில் முடி கொண்டவர்கள் ஒரு கூட்டமாகவும், சிகப்பு நிறத்தில் முடி கொண்டவர்கள் மற்றொரு கூட்டமாகவும் புதைக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ப்ரிகாம் யங் பல்கலைக்கழக திட்ட இயக்குனரான பேராசிரியர் கெர்ரி முஹ்லெஸ்டின் கூறுகையில், அந்த இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள் புதையுண்டு இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். வரும் காலத்தில் மேலும் அதிசயிக்கத்தக்க தகவல் இங்கிருந்து கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post