இது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும் காரணங்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியில் ராம்குமார் இறந்தார் என்பது பொய். சிறையிலேயே இறந்துவிட்டார் என்று நம்மிடம் பகீர் வாக்குமூலம் கொடுக்கிறார் புழல் சிறைக் கைதி ஒருவர்.
சுவாதி கொலையின் போது கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் புழல் சிறை நிரம்பி வழிந்தது. ராம்குமாரால் தானே கைது செய்யப்பட்டோம் என்று கோபத்தில் இருந்த கைதிகள் கூட அவனை சிறையில் பார்த்ததும் மனசை மாற்றிக்கொண்டார்கள்.
அதிர்ந்து கூட பேசாத ராம்குமார் மீது எங்களுக்கு பரிதாபம்தான் ஏற்பட்டது. அவன் எச்சில் துப்பப் போனால்கூட காவலர்கள் பின்னாடியே நின்னு வாட்ச் பண்ணுவாங்க.
வீடியோ கான்பரன்ஸுக்குக்கூட அவனை வாகனத்துல கூட்டிக்கிட்டுப் போற காவலர்கள், தண்ணீர் கேட்டான் வாக்கிங் போகணும்னு சொன்னான்…அதனாலதான், திறந்துவிட்டோம்…’னு சொல்றதை ஏத்துக்கவே முடியாது.
சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை 18-ந் தேதி 1 மணிக்கெல்லாம் கைதிகளுக்கு சாப்பாடு வந்துடுச்சு. வாரத்துக்கு ஒருநாள் 150 கிராம் சிக்கன் கொடுக்கணும். ஆனா, ஒரு பீஸ் சிக்கன் தான் கொடுப்பாங்க.
அந்த சிக்கன்பீஸுக்காக சிறையில பெரிய களேபரமே நடக்கும். 2:40க்கு சிக்கனை சாப்ட்டுட்டு வழக்கம்போல ப்ளாக்ல பேசிக் கிட்டிருந்தோம்.
வழக்கமா 5 மணியிலிருந்து 5:45 மணிக்குத்தான் எங்களை செல்லுக்குள்ள வெச்சு பூட்டுவாங்க. ஆனா, அன்னைக்கு திடீர்னு வந்த வார்டர்கள் “உள்ள போ……உள்ள போ…’ன்னு’ 3:45 மணிக்கே பூட்டிட்டாங்க.
என்னமோ நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். சுமார் 4:30 மணி இருக்கும். ஒரே கூட்டம். ராம்குமாரை ஸ்ட்ரெச்சர்ல வெச்சு டிஸ்பென்சரியை நோக்கித் தள்ளிக்கிட்டுப் போனாங்க.
கொஞ்சநேரத்துல, ராம்குமார் கரண்ட் ஒயரை கடிச்சு செத்துட்டான்னு சிறை முழுக்க நியூஸ் பரவ ஆரம்பிச்சுடுச்சு. எங்களைப் பூட்டி வச்சிட்டு அந்தப் பையனை முடிச்சிட்டாங்க.
மறுநாள் 19 மற்றும் 20-ந் தேதியில கைதிகளின் ப்ளாக்குக்கு வழக்கமா வரவேண்டிய தினத்தந்தி பேப்பர்கூட வரல. மூணாவதுநாள் வந்த பேப்பரில்கூட ராம்குமார் செய்தியை கிழிச்சுட்டுத்தான் போட்டாங்க.
சாதாரணமான செக்கப்புக்கு கைதிகளை ‘கன்விக்ட்’ வார்டு உள்ள ராயப்பேட்டைக்கு கொண்டு வருவது வழக்கம்.
ஆனா, கரண்ட் ஷாக் அடிச்சு உயிருக்குப் போராடிக்கிட்டிருந்ததா சொல்ற ராம்குமாரை சிறை டாக்டர் நவீன்குமார்… 108 ஆம்புலன்ஸில் 45 நிமிடங்கள் ஆகும் எனத் தெரிந்தும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
போகும் வழியிலேயே பெரிய மருத்துவமனையில் காண்பிச்சு, முதலுதவி கொடுத்து உயிரைக் காப்பாற்றிட்டுத்தானே ராயப்பேட்டைக்கு கொண்டு போயிருக்கணும்? அதுவும், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணின வார்டர்கள் கரண்ட் ஷாக் அடிச்சுடுச்சுன்னுகூட சொல்லல.
வாயில காயம்……இரத்த வாந்தி எடுக்கிறான்னுதான் 4:40க்கு போன் பண்ணியிருக்காங்க. இதெல்லாமே, ராம்குமார் சிறையிலேயே இறந்துட்டான்னு நான் சொல்றதுக்கு உங்களுக்கான ஆதாரம்.
தற்கொலை பண்ணிக்கணும்னு நினைச்சுருந்தா என்னைக்கோ தற்கொலை பண்ணியிருக்கணும். இது…போலீஸோட பக்கா திட்டமிட்ட கொலை என்று பகீர் கிளப்புகிறார் நாம் சந்தித்த புழல் கைதி.
சம்பவம் குறித்து புழல் சிறையின் அதிகாரி அன்பழகனை விடாமல் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது… வாக்கிங் போகணும்னுதான் திறந்து விட்டிருக்காங்க.
அதுக்குள்ள, இப்படி மின்வயரை கடிச்சு தற்கொலை பண்ணியிருக்கான் என்றவரிடம், தண்ணீர் குடத்தை வெளியில வெச்சிருக்கீங்களே? என்று நாம் கேட்டபோது, தண்ணீர் குடத்தை உள்ள வெச்சிருந்தா அவன் மேல இருக்குற கோவத்துல எதையாவது தண்ணில கலக்கி விட்டுருவாங்கன்னுதான் வெளியில வெச்சிருந்தோம்.
அவனே, உள்ளிருந்தும்கூட கையைவிட்டு குடிச்சுக்கலாம்’ என்றவரிடம், அப்படின்னா வெளியில இருக்கிற கைதிகள் அந்தத் தண்ணீர் குடத்துல எதையும் கலந்துட மாட்டாங்களா? என்று நாம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நடக்குது சார்…… இதுக்குமேல உங்ககிட்ட பேச முடியாது சார்.. என்று போனை துண்டித்தார்.
ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக வழக்கு தொடுத்துள்ள பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு நம்மிடம், இது சாதாரண மரணமல்ல, நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதியின் மரணம்.
மேலும், அரசுக்கே சம்பந்தம் இருப்பதாக சந்தேகிப்பதால்தான் எங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை பிணக்கூறாய்வு செய்ய அனுமதி கேட்டோம்.
இது, பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் சொல்லியிருக்கின்றன. சட்டக்கமிஷன், போலீஸ் கமிஷன் எல்லாம் தனியார் மருத்துவர்களை வைத்து உடல் பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்திருக்கின்றன.
ஏற்கனவே இளவரசன் மர்ம மரணம், எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் என உயர்நீதிமன்றத்தாலேயே அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.
ஆனாலும் இந்த வழக்கில் தமிழக அரசு தனியார் மருத்துவரை அனுமதிக்கக்கூடாது என்று அழுத்தம் கொடுப்பது எதையோ மறைக்க என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
உச்சநீதிமன்றம் போயாவது தனியார் மருத்துவரை வைக்க அனுமதி வாங்கி ராம்குமாரின் கொலையை வெளிக் கொண்டு வருவோம் என்கிறார் அவர்.
கைதிகளைப் பாதுகாக்க வேண்டிய சிறையில் நடந்த உயிர்பறிப்பின் மர்மங்களை நீதித்துறையால் மட்டுமே முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும்.
tw