எஞ்சியுள்ள காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம் என கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
பெரும்பான்மை சமூகத்தினரிடத்தில் தேடல் முயற்சி அதிகமாக உள்ளது. தமது சொந்தக் கையை நம்பும் தைரியம் அவர்களிடத்தில் காணப்படுகின்றது. ஆனால் சிறுபான்மை சமூகத்தினரிடத்தில் அரசாங்கமே தர வேண்டும் என்ற எதிர்பார்பு உள்ளது.
அரசாங்கம் வழங்கினாலும் அதனை அரை விலைக்கு விற்க வேண்டும் என்று ஒரு சிலர் இருக்கின்றனர். அவ்வாறு உள்ளவர்களுக்கு இறைவனின் வரப்பிரசாதம் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் முதலின் நாங்கள் எங்களை ஏமாற்றுகின்றோம். பின்னர் இறைவனை, அரச அதிகாரிகளை, அரசாங்கத்தை ஏமாற்றுகின்றோம்.
சிறுபான்மை சமூகங்கள் வாழும் அனேகமான பிரதேசங்களில் மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கினால் அன்று மாலை நேரத்தில் விளங்கிக் கொள்ள முடிகின்றது கடைகளில் அதனை அரைவிலைக்கு வாங்க முடியும் என்று.
நாங்கள் பெரும் கவலையோடு பார்க்கின்ற விடயம் இது. அரசாங்கத்தின் பணத்தை மிக இலகுவாக கொண்டு வருவது கிடையாது. மிகவும் சிரமப்பட்டு, கஸ்டப்பட்டு, சண்டை பிடித்து நிதிகளை கொண்டு வந்து இங்கு உதவிகளை வழங்கும் போது அது வெற்றியளிக்காமல் போவதாக இருந்தால் அது கவலையளிக்கின்ற விடயமாகும்.
எல்லோரும் முயற்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இதுபோன்று மீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகளும் படிப் படியாக தீர்த்து வைப்பதற்கான முனைப்புகளை எடுத்துள்ளோம். கடற்தொழில் நீரியவளத்; திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்னும் சற்று வேகமாக குட்டி அமீர் அலி போன்று செயற்பட வேண்டும் என்றார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியவளத்; திணைக்கள உதவிப் பணிப்பாளர் றுக்சான் குறூஸ், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எல்.றியாஸ், சமுர்த்தி முகாமையாளர் அப்துல் அஜீஸ், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் இருபது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பலநோக்கு கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
-முர்ஷிட் கல்குடா-